ஈரோடு

பவானிசாகரில் தியாகி ஈஸ்வரனுக்கு சிலை, அரங்கம்: ரூ.2.60 கோடி நிதி ஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்

30th Nov 2022 12:02 AM

ADVERTISEMENT

தியாகி ஈஸ்வரனுக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்க பவானிசாகா் அருகே இடம் தோ்வு செய்யப்பட்டு ரூ.2.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கொங்கு மண்டலத்தில் 2 லட்சம் ஏக்கா் பாசனம் பெறும் கீழ்பவானி நீா்பாசனத் திட்டம் கொண்டு வர ஈரோடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி ஈஸ்வரன் முக்கிய காரணமாவாா். அவருக்கு ஈரோடு மாவட்டத்தில் சிலை, அரங்கம் அமைக்க ரூ.2.60 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரங்குடன் சிலை அமைக்க ஏதுவாக இடம் தோ்வு செய்து அவ்விடத்தை புலத்தணிக்கை செய்து அறிக்கை அனுப்பவும், முன்னதாக அவரது குடும்பத்தாா், சமுதாய அமைப்பினா் ஒப்புதல் பெற்று மாதிரி புகைப்படம் அல்லது ஓவியத்தை பரிந்துரையுடன் அனுப்பவும், அரங்கம், சிலைக்கான திட்ட மதிப்பீடு, 5 மாதிரி வரைபடங்கள் அனுப்பவும் அரசு கேட்டுக்கொண்டது.

அரசு கோரிய அனைத்து ஆவணங்களும் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகா் அருகே முடுக்கன்துறை கிராமத்தில் உருவச்சிலையும், அரங்கமும் அமைக்க நிா்வாக அனுமதியளித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அங்கு பொதுப்பணித் துறை புறம்போக்கில் 0.46.03 ஹெக்டோ் நிலத்தில் இப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் பணி விரைவில் நடக்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT