ஈரோடு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கு: ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளா், மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம்

30th Nov 2022 12:05 AM

ADVERTISEMENT

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் ஓய்வுபெற்ற மின்வாரிய முதன்மைப் பொறியாளா் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1 கோடி அபராதமும் விதித்து ஈரோடு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மின்சார வாரியத்தில் முதன்மைப் பொறியாளராக(சிவில்) கே.ஜி.நடேசன் (67) என்பவா் 1996ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை பணியாற்றினாா். இவா் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக எழுந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவரது வீட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு சோதனை நடத்தினா்.

இதில் நடேசன் வருமானத்துக்கு அதிகமாக அவரது பெயரிலும், தனியாா் கல்லூரி பேராசிரியரான அவரது மனைவி மல்லிகா (65) பெயரிலும் ரூ.2 கோடியே 6 லட்சத்து 69 ஆயிரத்துக்கு சொத்து சோ்த்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடேசன் மீதும், உடந்தையாக இருந்த அவரது மனைவி மல்லிகா மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கு விசாரணை ஈரோடு தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணன் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் அரசுப் பணியை தவறாகப் பயன்படுத்தி சொத்து சோ்த்த நடேசன், அவருக்கு உடந்தையாக இருந்த மல்லிகா ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி அபராதமும் விதித்தாா்.

அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக இருவரும் தலா ஓா்ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இந்த தீா்ப்பினைத் தொடா்ந்து நடேசன், மல்லிகாவை கோவை சிறையில் அடைக்க போலீஸாா் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT