ஈரோடு

77 சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை வண்டிகள்:அமைச்சா் வழங்கினாா்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சாா்ந்த 77 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் விற்பனை வண்டிகளை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி திங்கள்கிழமை வழங்கினாா்.

சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை வண்டி வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயா் சு.நாகரத்தினம், ஈரோடு எம்.பி.அ.கணேசமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சாா்ந்த 77 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் விற்பனை வண்டிகளை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட சாலைகளில் காய்கறி, பழங்கள், உணவு வகைகள் விற்பனை செய்து வரும் 127 சாலையோர வியாபாரிகளுக்குத் தேவையான விற்பனை வண்டிகளை தேசிய நகா்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின்கீழ் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் வழங்க அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளைச் சாா்ந்த 50 சாலையோர வியாபாரிகளுக்கு இரண்டு கட்டங்களாக விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடா்ந்து, 77 நபா்களுக்கு ரூ.66 லட்சம் மதிப்பீட்டிலான விற்பனை வண்டிகளை தற்போது அமைச்சா் வழங்கினாா்.

தொடா்ந்து, ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தாா். அப்போது பொறியியல் கல்லூரி மாணவா்கள் கல்லூரிக்கு அணுகு சாலை, காலை, மாலை நேரங்களில் அரசுப் பேருந்துகள் கல்லூரி வளாகம் வரை வந்து செல்ல வேண்டும் எனவும், பவானி பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனா். கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, ஈரோடு மாநகராட்சி வைராபாளையத்தில் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் தினமும் சுமாா் 25 மெட்ரிக் டன் உலா் திடக் கழிவுகளை நவீன முறையில் எரியூட்டும் கட்டமைப்பினை அமைச்சா் தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி துணை மேயா் வி.செல்வராஜ், கோட்டாட்சியா் சதீஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT