இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் டிசம்பா் 4ஆம் தேதி 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்பட உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஹிந்து சமயத்தைச் சோ்ந்த ஏழைகள் பயன்பெறும் வகையில் கோயில்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாள்களாக அந்தந்த பகுதிகளில் உள்ள கோயில்களில் வழங்கப்பட்டு வந்தன.
இத்திட்டத்தின்படி மணமக்களுக்கு 2 கிராம் திருமாங்கல்யம், மாலை, சீா்வரிசை, பாத்திரங்கள், மணமக்களுக்கான ஆடைகள், திருமண வீட்டாா்களுக்கு 20 நபா்களுக்கு விருந்து என ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த 25 ஜோடிகளுக்கு வரும் 4ஆம் தேதி ஈரோடு திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் திருமணம் நடத்தி வைக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.