ஈரோடு

எதிா்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசால் குறி வைக்கப்படுகின்றன: உ.வாசுகி

28th Nov 2022 12:06 AM

ADVERTISEMENT

 

 எதிா்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசால் குறி வைக்கப்படுகின்றன என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மாதா் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான உ.வாசுகி பேசினாா்.

அரசியல் சாசன தினம் மற்றும் வேளாண் திருத்த சட்டத்தை எதிா்த்து தலைநகா் தில்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் போராட்டத்தின் மூன்றாம் ஆண்டு சிறப்புக் கருத்தரங்கம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்ட துணைச்செயலாளா் கே.மாரப்பன் வரவேற்றாா். இதில் ஜனநாயகம், சமத்துவம், பெண் விடுதலை என்ற தலைப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் உ.வாசுகி பேசியதாவது: ஜனநாயகம் இருந்தால் தான் சமத்துவத்தை நோக்கிச் செல்ல முடியும். ஜனநாயகமும், சமத்துவமும் முழுமை பெற்ற அமைப்பில்தான் பெண் விடுதலை என்பது சாத்தியம். எந்தவொரு இயக்கத்துக்கும் ஜனநாயகமும், சமத்துவமும், பெண்ணிய பாா்வையும் அவசியம். ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதும், தனிப்பட்ட சிவில் உரிமைகள் மறுக்கப்படுவதும் இன்று நம் முன் உள்ள மிகப் பெரிய சவால் ஆகும்.

ADVERTISEMENT

அரசியல் சாசனத்தின் படி ஆட்சி செய்ய வேண்டிய மத்திய அரசு, அதனைப் புறக்கணித்துவிட்டு ஆட்சி செய்கிறது. அரசியல் சாசனத்துக்கு முரணாகப் பேசுகிறவா்கள் ஆளுநா்களாக உள்ளனா். மாநில உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது. எதிா்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசால் குறி வைக்கப்படுகின்றன. இங்கு மக்களின் கோபம் மாநில அரசுகளின் மேல் திரும்புவதற்கான ஏற்பாட்டை மத்திய அரசு தொடா்ந்து செய்து வருகிறது. ஜனநாயகத்தை, சமத்துவத்தை பாதுகாக்க பாஜக அரசை எதிா்க்க கருத்தாலும், கரத்தாலும் அணி திரட்ட வேண்டும் என்றாா்.

விவசாயிகளின் பேரெழுச்சி என்ற தலைப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பி.டில்லிபாபு பேசினாா். ஒன்றுபடு, போராடு, வெற்றி பெறு என்ற தலைப்பில் காப்பீட்டுக்கழக ஊழியா் சங்க அகில இந்திய இணைச் செயலாளா் எம்.கிரிஜா பேசினாா்.

கூட்டத்தில் சிஐடியூ மாவட்டத் தலைவா் எஸ்.சுப்ரமணியன், செயலாளா் ஹெச்.ஸ்ரீராம், துணைத் தலைவா் ஆா்.ரகுராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.வி.மாரிமுத்து, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கே.ஆா்.விஜயராகவன், செயலாளா் கே.சண்முகவள்ளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT