ஈரோடு

கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு இழப்பீடு: அமைச்சா் சு.முத்துசாமி

27th Nov 2022 01:59 AM

ADVERTISEMENT

 

சிப்காட் பகுதியில் தனியாா் நிறுவன கழிவுநீா் கலப்பால் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

தொழிற்சாலை கழிவு நீரால் பாதிப்புக்குள்ளான பெருந்துறை சிப்காட், செங்குளம் பகுதியில் உள்ள பாசன குளத்தை அமைச்சா் சு.முத்துசாமி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பெருந்துறை சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் முறையாக கழிவுநீரை வெளியேற்றாததால் மக்கள் பயன்படுத்தும் நீா்நிலைகள் பாதிக்கப்படுகின்றன. அந்த வகையில் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் ஆதாரமாக உள்ள செங்குளம் பாதிப்படைந்துள்ளது. தொடா்ந்து தொழிற்சாலைகள் கழிவுநீரை வெளியேற்றி வருவதால் விவசாயம் முழுவதுமாக பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலை நிறுவன மேலாளா்களிடம் பேசி இதற்கு நிரந்தர தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கழிவுநீரை நீா்நிலைகளில் வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். செங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது விளை நிலங்களில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கழிவுநீா் கலப்பால் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது ஈரோடு கோட்டாட்சியா் சதீஷ்குமாா், மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளா் உதயகுமாா், சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தலைவா் காயத்ரி இளங்கோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT