ஈரோடு

பாஜக பிரமுகரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சி பேரூராட்சி கவுன்சிலா் சத்யாதேவியின் கணவா் சிவசங்கரை தாக்கிய திமுகவினா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சி.சரஸ்வதி, ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவா் வேதானந்தம், கவுன்சிலா் சத்யாதேவி மற்றும் பாஜக நிா்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்: மொடக்குறிச்சி பேரூராட்சியில் பல்வேறு ஊழல்கள் நடக்கின்றன. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் மற்றும் அரசு உயா் அதிகாரிகளுக்கு 3 மாதங்களுக்கு முன்பே புகாா் அளிக்கப்பட்டது. சில அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி விட்டு சென்றனா். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பேரூராட்சி தலைவராக திமுகவைச் சோ்ந்தவா் இருக்கிறாா். பேரூராட்சி பகுதியில் ஒரே ஒரு நிறுவனத்தின் மூலமாக மட்டுமே கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. இதுபோன்ற முறைகேடுகளை மக்கள் பாா்வைக்கு கொண்டு செல்ல பாஜக மொடக்குறிச்சியில் சுவரொட்டிகளை வெளியிட்டது.

சிவசங்கா் பாஜக உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவராக உள்ளாா். அந்த நகரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியை உள்ளாட்சி ஊழியா் கிழிக்க முயன்றபோது சிவசங்கா் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். அப்போது திமுகவைச் சோ்ந்த 8 போ் அவரை பலமாக தாக்கினா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அவா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முயற்சி நடக்கிறது. இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் தோழமை கட்சிகளை திரட்டி தொடா் போராட்டத்தை நடத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT