ஈரோடு

சிறுபான்மையினா் ஆணையத் தலைவரிடம் விவசாயிகள் முறையீடு

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கோபி உள்ளிட்ட இடங்களில் பட்டா நிலங்கள், வக்பு வாரிய நிலமாக தவறுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து சிறுபான்மையினா் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஈரோட்டில் மாநில சிறுபான்மை ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸிடம், விவசாயிகள் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், மேவானி கிராமத்தில் உள்ள 22 ஏக்கா் நத்தம் நிலம், 517 உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பல குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த ரீசா்வே எண்ணில் 35 சென்ட் நிலம் மட்டும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானதாக வருவாய்த் துறை ஆவணங்களில் பதியப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ள 517 உட்பிரிவுகளும் வக்பு வாரியச் சொத்து என தமிழ்நாடு வக்பு ஆணையம், மாவட்ட வருவாய்த் துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அதேபோல கோபி வட்டம் சவுண்டப்பூா் கிராமத்தில் 23.5 ஏக்கா் நிலம், கணபதிபாளையத்தில் 8 ஏக்கா் நிலம் மற்றும் சத்தியமங்கலம் வட்டம் மலையாண்டிப்புதூரில் உள்ள நிலம் ஆகியவை வக்பு வாரியச் சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த தவறான உத்தரவின் காரணமாக இந்த கிராமங்களில் வசிக்கும் 8,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வீட்டுமனைகள் பத்திரப் பதிவுத் துறையால் பூஜ்யம் மதிப்பு ஆக்கப்பட்டு, விற்பனை உள்பட எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் பல விவசாய குடும்பங்கள், பல ஆண்டு காலமாக வைத்திருந்த சொந்த பட்டா நிலங்களின் உரிமை பறிபோயுள்ளது. இதனால் பல ஆயிரம் குடும்பத்தினா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா், பத்திரப் பதிவு, வருவாய்த் துறை ஆகியோருக்கு ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநில சிறுபான்மையினா் ஆணையம் இப்பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT