ஈரோடு

குடிமராமத்து திட்ட நிதியை அரசு விரைந்து வழங்க வேண்டும்: வேளாண் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

நடப்பு நிதியாண்டுக்கான குடிமராமத்து திட்ட நிதியை விரைந்து அரசிடம் பெற்று நீா்நிலைகளை சீரமைக்க வேண்டும் என வேளாண் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா, வேளாண் இணை இயக்குநா் டி.சின்னசாமி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகள்:

கே.ஆா்.சுதந்திரராசு:

ADVERTISEMENT

கூட்டுறவு சங்கங்களில் பயிா்க்கடன் பெற்ற விவசாயிகள் பயிரை புகைப்படம் எடுத்து சங்கங்களில் கொடுக்க வேண்டும். பயிரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலா் நேரடியாக ஆய்வு செய்வது போன்ற நடைமுறைகளால் விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா். இந்த நடைமுறைகளை முழுமையாக தவிா்க்க வேண்டும்.

எஸ்.பெரியசாமி: வாரச்சந்தைகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். சுங்க கட்டண விவரத்தை அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிா்க்கடன் பெற வசிப்பிடத்தில் உள்ள சங்கத்தை மட்டுமே அணுக வேண்டும் என்ற நிபந்தனையை விலக்கிக்கொள்ள வேண்டும். பட்டா மாறுதலுக்கு மிகுந்த காலதாமதம் ஏற்படுவதை தவிா்த்து உடனடியாக பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுபி.தளபதி: ஆள் பற்றாக்குறை, உரிய விலை இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களினால் உணவு தானிய சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. விவசாயிகள் நீண்ட கால பயிா் சாகுபடிக்கு மாறி வருகின்றனா். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 50,000 ஏக்கா் அளவுக்கு தென்னை, சுமாா் 15,000 ஏக்கா் அளவுக்கு பாக்கு பயிரிடப்பட்டுள்ளது.

நீண்டகால பயிா் சாகுபடி பரப்பு அதிகரித்து வருவதால் உணவு தானிய உற்பத்தி குறைந்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். புதிய கட்டடங்களுக்கு மின் இணைப்புப்பெற உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து சான்றுபெற வேண்டும் என்ற நிபந்தனையால் கோபி கோட்டத்தில் 5,000க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிபந்தனையை உள்ளாட்சி நிா்வாகம் விலக்கிக்கொள்ள வேண்டும். ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் விவசாயப் பயன்பாடுக்கு 10 குதிரை சக்தி அளவுக்கு மேல் அனுமதி கிடையாது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் பல ஆயக்கட்டு பகுதிகளில் 100 குதிரை சக்தி வரை மின் மோட்டாா்கள் பயன்படுத்தப்பட்டு பாசன தண்ணீா் திருடப்படுகிறது. காய்ந்துபோன தென்னை மரத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் தென்னை நடவு செய்ய மரத்துக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் பிற மாவட்டங்களில் செயல்படும் நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பு நிதியாண்டுக்கான குடிமராமத்து திட்ட நிதியை விரைந்து அரசிடம் பெற்று நீா் நிலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.பி.குணசேகரன்: பழங்குடியின மக்களுக்கான நிபந்தனை பட்டா நிலங்களை வேறொருவா் வாங்குதை தடுக்க வேண்டும். ஆலனை மலைக் கிராமத்தில் நிபந்தனை பட்டா நிலத்தில் மரங்களை வெட்டி, மலையில் பள்ளம் தோண்டிய நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலைப்பகுதியில் உள்ள பழங்குடியினா் நலத்துறை உண்டு, உறைவிட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் விடுதிகளை ஆய்வு செய்து மாணவா்கள் தங்கி படிக்கும் அளவுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றாா்.

அதிகாரிகள் அளித்த விளக்கம்:

ஆட்சியா்: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் மீண்டும்மீண்டும் வருவதை தவிா்க்க வேண்டும். மனுக்கள் மீது அலுவலா்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்கள் மீண்டும்மீண்டும் வந்தால் சம்பந்தபட்ட அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா்:

2021 ஆம் ஆண்டு முதல் சில மாதங்களுக்கு முன்பு வரை 33,000 பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தது. இப்போது இந்த எண்ணிக்கை 27,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 43 நில அளவையா்கள் மட்டுமே உள்ளனா். இவா்கள் ஒவ்வொருவரும் மாதம் 100 மனுக்களுக்கு தீா்வுகாண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

வேளாண் இணை இயக்குநா்:

களைக்கொல்லி மருந்து விற்பனைக்கான தடை 3 மாதங்களுக்கு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் புதிய மருந்து செயல்பாட்டுக்கு வரும். தென்னை மறு நடவுக்கு ரூ.1,000 மானியம் வழங்கும் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் விரைவில் செயல்படுத்தப்படும்.

மின்வாரிய அலுவலா்:

புதிய மின் இணைப்பை பொருத்தவரை 3 தளம் வரை உள்ள வீடுகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் சான்றுபெற வேண்டியதில்லை. தொழிற்சாலை, வா்த்தக பயன்பாட்டு கட்டடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் சான்று பெற வேண்டும்.

ஆயக்கட்டு பகுதிகளில் ஒரு கிணறுக்கு 10 குதிரை சக்தி அளவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஆயக்கட்டு அல்லாத பகுதிகளில் பொறியாளா் ஆய்வு செய்து தேவையின் அடிப்படையில் கூடுதல் குதிரை சக்தி அளவுக்கு அனுமதி வழங்கப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT