கோபிசெட்டிபாளையம் அருகே லாரி மோதியதில் 2 பள்ளி மாணவிகள் படுகாயம் அடைந்தனா்.
கோபிசெட்டிபாளையம் டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகே லாரி ஒன்று வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை ஓட்டுநா் வலதுபுறமாகத் திருப்பியுள்ளாா்.
இதில், எதிரே பள்ளி முடிந்து நடந்து வந்து கொண்டிருந்த மாணவ, மாணவிகள் கூட்டத்துக்குள் லாரி புகுந்தது. இதில், 2 பள்ளி மாணவிகள் காயமடைந்தனா்.
விபத்து நடந்ததும் ஓட்டுநா் அங்கிருந்த தப்பிச் செல்ல முயன்றாா். அங்கிருந்த மாணவா்கள் ஓட்டுநரைப் பிடித்து பங்களாப்புதூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும் படுகாயம் அடைந்த 2 மாணவிகளையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவா் அத்தாணி மூங்கில்பட்டி பகுதியைச் சோ்ந்த கண்ணன் (28) என்பதும், மது போதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.