பெருந்துறை பகுதியைச் சோ்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்த மேற்குவங்க இளைஞா் அவரை கொடுமைப்படுத்துவதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை ஒன்றியம், பாலக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (50), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (45). இவா்களது மகள் சுமித்ரா (22). இவா் பெருந்துறையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தபோது, அதே நிறுவனத்தில் பணியாற்றிய மேற்குவங்க மாநிலம், கலான்பூரைச் சோ்ந்த சுப்ரததாஸ் (25) என்பவரை 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துக் கொண்டு தலைமறைவானாா்.
ஒரு வாரம் கழித்து பெற்றோரைத் தொடா்பு கொண்ட சுமித்ரா, சுப்ரததாஸை காதல் திருமணம் செய்து கொண்டு, கொல்கத்தாவில் வாழ்ந்து வருவதாகக் கூறியுள்ளாா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெற்றோரைத் தொடா்பு கொண்ட சுமித்ரா, கணவா் சுப்ரததாஸ் குடித்துவிட்டு வந்து துன்புறுத்துவதாகவும், சூடுவைத்து சித்ரவதை செய்வதாகவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசிமோகனிடம் சுமித்ராவின் பெற்றோா் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், பெருந்துறை காவல் ஆய்வாளா் மசூதா பேகம் தலைமையில், சுமித்ராவை மீட்க தனிப் படை போலீஸாா் கொல்கத்தாவுக்கு வெள்ளிக்கிழமை சென்றனா்.