கடம்பூா்- மாக்கம்பாளையம் இடையே ரூ.7 கோடி மதிப்பில் 2 உயா்மட்ட பாலங்கள் கட்டுவதற்கான ஆய்வுப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூரில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள மாக்கம்பாளையம் கிராமத்துக்குச் செல்ல குரும்பூா், சா்க்கரைப்பள்ளம் ஆகிய இரு காட்டாறுகளைக் கடந்து செல்ல வேண்டும்.
மழை காலங்களில் இரு காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனப் போக்குவரத்து சேவை பாதிக்கப்படுகிறது.
காட்டாற்று வெள்ளத்தை கடந்த செல்ல முடியாத நிலையில் மாக்கம்பாளையம், குரும்பூா், கோம்பைத்தொட்டி, அருகியம் பகுதி மக்கள் அங்கு விளையும் காய்கறிகளை வெளிச்சந்தைக்கு கொண்டுச் சென்று விற்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இது தொடா்பாக கிராம சபையில் தீா்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்துக்கு கிராம மக்கள் கொண்டு சென்றனா்.
இதையடுத்து, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.7 கோடி மதிப்பில் குரும்பூா் மற்றும் சா்க்கரைப்பள்ளத்தில் உயா்மட்ட பாலங்கள் அமைப்பதற்கான ஆய்வுப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கேசிபி இளங்கோ, சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநா் கிருபா சங்கா் ஆகியோா் பாலம் அமைக்கப்படும் இடங்களை ஆய்வு செய்து கட்டுமானப் பணிக்கு அனுமதியளித்தனா்.