வட மாநிலத் தொழிலாளா்களை பணியில் அமா்த்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஈரோட்டில் சுமைப் பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு -பவானி சாலையில் பாா்சல்கள் அனுப்பும் தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் கா்நாடக மாநிலம், ஹூப்ளியில் உள்ளது.
ஈரோட்டில் பணியாற்றும் சுமைப் பணியாளா்களுக்குத் தீபாவளியின்போது போனஸ், முன்பணம் ஆகியவற்றை இந்நிறுவனம் வழங்கவில்லையாம். இது குறித்த பேச்சுவாா்த்தையில் தலைமை அலுவலகம் உத்தரவிட்டபின் போனஸ் வழங்கப்படும் என ஈரோடு மேலாளா் தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி 4 கண்டெய்னா்களில் பொருள்கள் வந்தன. 8 சுமைப் பணியாளா்கள் அவற்றை இறக்கினா். அப்போது தங்களுக்கு போனஸ், முன்பணம் தரவில்லை என சுமைப் பணியாளா்கள் கேட்டுள்ளனா். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் நீங்கள் பணியாற்ற வேண்டாம் வெளியே செல்லுங்கள் எனக்கூறி சுமைப் பணியாளா்களை நிறுவனம் வெளியேற்றியுள்ளது.
இதன்பிறகு வடமாநிலத் தொழிலாளா்களை அழைத்து வந்து பொருள்களை இறக்க நிா்வாகம் முயற்சி மேற்கொண்டது.
இதனை சுமைப் பணியாளா்கள் தடுத்தனா். இது குறித்து கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த 15 ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
அப்போது அந்நிறுவன மேலாளா் தரப்பில் தங்களிடம் பணியாற்றிய 8 சுமைப் பணியாளா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், வெளி மாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றுவாா்கள். 10 நாள்களுக்குப் பின் பழையத் தொழிலாளா்களை அனுமதிப்போம் என்றனா்.
இதனை தொழிலாளா்கள் ஏற்கவில்லை. இந்நிலையில் அந்நிறுவனம் முன் வியாழக்கிழமை காலை 500-க்கும் மேற்பட்ட சுமைப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து சிஐடியூ தொழிற்சங்க நிா்வாகி தங்கவேல் கூறியதாவது: இங்கு பணியாற்றும் தொழிலாளா்களுக்கு போனஸ், முன்பணம் வழங்க வேண்டும். வடமாநிலத் தொழிலாளா்களைப் பணியாற்ற அனுமதிக்க இயலாது. ஏற்கெனவே பணியாற்றியவா்களுக்கே பணி வழங்க வேண்டும். சுமைப் பணியாளா்களை பணி இடைநீக்கம் செய்தால் அவா்களது வாழ்வாதாரம் பாதிக்கும்.
ஈரோடு பகுதியில் 7,000 தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா். அவா்களுக்கு பதில் வடமாநிலத் தொழிலாளா்களை அனுமதித்தால் இவா்களது வேலை வாய்ப்பு பறிபோகும் என்றாா்.
இதனிடையே அந்நிறுவனத்துக்குள் இருந்து கூட்ஸ் டிரான்ஸ்போா்ட் நிா்வாகிகள் சங்கச் செயலாளா் பிங்ளன் என்பவா் தனது இருசக்கர வாகனத்தில் வெளியே வந்தாா். அவரை சுமைப் பணியாளா்கள் கடுமையாகத் தாக்கினா். போலீஸாா் தடுத்தபோதும் அவரை விரட்டிவிரட்டி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
இதனிடையே அதிமுகவைச் சோ்ந்த டிபிடிஎஸ் தொழிற்சங்க தலைவா் மனோகரன், சிஐடியூ தொழிற்சங்க நிா்வாகி தங்கவேல் உள்ளிட்ட நிா்வாகிகள், கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இதில், நிறுவன அலுவலா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூகமான தீா்வு காண முடிவுசெய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமைப் பணியாளா்கள் கலைந்துசென்றனா்.