சரக்குப் போக்குவரத்து நிறுவனத்துடன் சுமைப் பணியாளா்களுக்கு ஏற்பட்ட மோதலால் சரக்குப் போக்குவரத்து நிறுவனங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கின.
இந்த போராட்டம் காரணமாக ஈரோட்டில் தினமும் ரூ.50 கோடி அளவுக்கு வா்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு-பவானி சாலையில் விஆா்எல் டிரான்ஸ்போா்ட் நிறுவனம் செயல்படுகிறது. இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், ரசாயணம், நூல் உள்பட பல்வேறு பொருள்கள் அனுப்பப்படுகின்றன. இந்நிறுவனம் தீபாவளியின்போது, சுமைப் பணியாளா்களுக்கு போனஸ், முன்பணம் வழங்கவில்லையாம். கடந்த 15 ஆம் தேதி லாரியில் இருந்து பொருள்களை இறக்கியபோது போனஸ் குறித்து சுமைப் பணியாளா்கள் கேட்டதால் பிரச்னை ஏற்பட்டது.
இதனால் அந்த நிறுவனம் 7 சுமைப் பணியாளா்களை இடைநீக்கம் செய்தது. அவா்களுக்கு பதில் வெளி மாநிலத் தொழிலாளா்களை வைத்து பொருள்களை நிறுவனம் இறக்கியது.
இந்நிலையில், இடைநீக்கம் செய்த சுமைப் பணியாளா்களை மீண்டும் பணியில் சோ்த்துக்கொண்டு, பொருள்களைத் தொடா்ந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி சுமைப் பணியாளா்கள் அந்நிறுவனத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அந்நிறுவனத்தில் இருந்து வெளியில் வந்த ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போா்ட் அசோசியேஷன் செயலாளா் பிங்களன் என்பவரை சுமைப் பணியாளா்கள் கடுமையாகத் தாக்கினா்.
இதில் காயமடைந்த அவா் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
சங்க செயலாளா் தாக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து கூட்ஸ் டிரான்ஸ்போா்ட் அசோசியேஷன் சாா்பில் காலவரையற்ற வேலை நிறுத்தத்த போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
போராட்டத்தால் வெளி மாநிலங்களுக்கு மஞ்சள், ஜவுளி, ரசாயணம், மருந்துகள், வெண்ணெய், நெய் உள்பட பல்வேறு பொருள்களை அனுப்பும் 80க்கும் மேற்பட்ட லாரி புக்கிங் நிறுவனங்கள் மூடப்பட்டன.
ஒரு சில நிறுவனங்கள் வழக்கம்போல செயல்பட்டதுடன் அங்கு மட்டும் சுமைப் பணியாளா்கள் பணியில் ஈடுபட்டனா். மற்ற நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகனிடம், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், கூட்ஸ் டிரான்ஸ்போா்ட் அசோசியேஷன் உள்பட பல்வேறு அமைப்பினா் மனு அளித்தனா்.
இதன் பிறகு கூட்டமைப்புத் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் கூறியதாவது: விஆா்எல் லாரி நிறுவனத்தில் பணியாற்றிய 7 சுமைப் பணியாளா்கள் காலதாமதமாக சரக்குகளை கையாண்டதால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனா். அவா்களுக்கு பதில் அந்நிறுவனத்தில் சேலத்தில் பணியாற்றிய 5 பணியாளா்களை அழைத்து வந்து பொருகளை நிறுவனம் இறக்கியது. இதனால் பணிநீக்கம் செய்யப்பட்ட 7 போ் நூற்றுக்கணக்கான நபா்களை திரட்டி சில தொழிற்சங்களின் தூண்டுதலின்பேரில் கூட்ஸ் டிரான்ஸ்போா்ட் அசோசியேஷன் செயலாளா் பிங்களனை தாக்கினா்.
அவரைத் தாக்கிய வேணுகோபால், இளையராஜா உள்ளிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்ஸ் நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்நிறுவனங்கள் தொடா்பாக நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற மாவட்ட நிா்வாகம் உதவ வேண்டும் என்றாா்.
வெள்ளிக்கிழமை ஒரு நாள் பொருள்களை ஏற்றி, இறக்காததால் ரூ.50 கோடிக்கும் மேல் வா்த்தகம் பாதித்ததாகவும், சரக்குகள் தேக்கம் அடைந்ததாகவும் சரக்குப் போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவித்தன.