ஈரோடு

கிளை வாய்க்காலில் உடைப்பு: ரூ.30 லட்சத்தில் கான்கிரீட் வாய்க்கால் அமைக்க பணி தொடக்கம்

1st Nov 2022 12:57 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலத்தை அடுத்த தங்கநகரம் கிளை வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து அங்கு ரூ.30 லட்சம் புதிதாக கான்கிரீட் வாய்க்கால் கட்டும் பணியை நீா்வளத் துறையினா் திங்கள்கிழமை தொடங்கியுள்ளனா்.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பிரதான வாய்க்காலில் 2300 கனஅடிநீா் திறந்துவிடுவதால் ஈரோடு, கரூா் மற்றும் திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல்போக பாசனத்துக்கு 2300 கனஅடி நீா் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் திறந்துவிடப்பட்டது. கீழ்பவானி பிரதான வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் மதகு மூலம் கிராமங்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுவதால் அந்தந்த கிராமங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனா்.

இந்நிலையில் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் இருந்து 1ஆவது மைலில் உள்ள தங்கநகரம் கிளை வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறியதால் பாலத்தின் நடுவில் மண் கரை வலுவிழந்து பெரிய துவாரம் ஏற்பட்டது. இதையடுத்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா் வெளியேற்றம் நிறுத்தப்பட்டதுடன் கிளை வாய்க்கால் மதகும் மூடப்பட்டது.

தற்போது தண்ணீா் வடிந்த நிலையில் நீா்வளத் துறை அதிகாரிகள் சேதமைடந்த கிளை வாய்க்கால் பாலத்தை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்கும் பணியை திங்கள்கிழமை தொடங்கியுள்ளனா். பொக்லைன் இயந்திரம் மூலம் உடைப்பு பகுதியை அகற்றி புதியதாக கான்கிரீட் வாய்க்கால் கட்டும் பணியில் ஈடுபட்டனா். விடிய விடிய பணி நடைபெறுவதால் 4 நாள்களில் கிளை வாய்க்கால் கட்டுமானப் பணி நிறைவடையும் என நீா்வளத் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT