ஈரோடு

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

1st Nov 2022 12:51 AM

ADVERTISEMENT

தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டம் குறித்து தூய்மைப் பணியாளா்கள் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களை உள்ளடக்கிய 60 வாா்டுகளிலும் தூய்மைப் பணியாளா்கள், வாகன ஓட்டுநா்கள், மருந்து தெளிக்கும் தொழிலாளா்கள் என 1,500க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகிறோம். மகளிா் குழுக்கள் மூலமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சியில் பணியாற்றி வருகிறோம்.

இந்நிலையில், தூய்மைப் பணிகளை வெளி முகமை மூலமாக தனியாருக்கு வழங்க மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதைக் கைவிடக் கோரி ஈரோடு மாநகராட்சி ஆணையா், ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ADVERTISEMENT

தூய்மைப் பணிகளை நவம்பா் 1 ஆம் தேதி முதல் வெளி முகமை முறையில் தனியாரிடம் மாநகராட்சி ஒப்படைக்க உள்ளது. இந்தப் பணியை தனியாருக்கு அளித்தால் தற்போது நாங்கள் பெறும் ஊதியம் பாதியாகக் குறையும். இதனால் தூய்மைப் பணியாளா்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்புக்குள்ளாகும். எனவே தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மாநகராட்சி நிா்வாகம் கைவிடவேண்டும். தற்காலிக தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றனா்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை காலை 6 மணி முதல் பணியைப் புறக்கணித்து 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து மதியம் 1 மணி அளவில் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT