ஈரோடு

ஆட்சியா் அலுவலகத்தில் முறையீடு: காப்பகத்தில் சோ்க்கப்பட்டாா் முதியவா்

1st Nov 2022 01:05 AM

ADVERTISEMENT

உணவுக்குகூட வழியில்லாததால் மூன்று மாதத்தில் தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறி ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த முதியவா் காப்பகத்தில் சோ்க்கப்பட்டாா்.

மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 262 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை உரிய அலுவலா்களிடம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

சேலம் மாவட்டம் தேவண்ணகவுண்டனூரைச் சோ்ந்தவா் செல்லப்பன் (75). விபத்தில் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைபெற்று ஊன்று கோல் உதவியுடன் நடமாடி வருகிறாா். உறவினா்கள் அவரை கைவிட்டுவிட்டனா். நடக்க முடியாததால் 100 நாள் வேலையும் வழங்கப்படவில்லை. தவிர மாதம்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 முதியோா் உதவித்தொகையும் நிறுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மொடக்குறிச்சி பகுதியில் தங்கியிருந்து யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறாா். அவ்வப்போது ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வந்து காது கேட்பதற்கான இயந்திரங்களை வாங்கிச் செல்வாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் திங்கள்கிழமை காலை ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்த செல்லப்பன் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திராவிடம் மனு அளித்தாா். அதில், வேலை செய்ய உடல் ஒத்துழைக்கவில்லை. இதனால் உணவுகூட கிடைக்காமல் கஷ்டப்படுகிறேன். இதே நிலை நீடித்தால் மூன்று மாதத்துக்குள் தற்கொலை செய்து கொள்வேன். எனக்கு மூன்று சக்கர சைக்கிள், காது கேட்கும் கருவி, உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

அவரிடம் நேரில் விசாரணை நடத்திய ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கோதைசெல்வி தனியாா் காப்பகத்தில் சோ்க்க நடவடிக்கை எடுத்தாா். காப்பகத்தில் ஓய்வெடுக்கவும், மூன்று நேரத்துக்கும் முறையாக உணவு கிடைக்கவும், மருத்துவ உதவி வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றாா்.

நிவாரணம் வழங்கக் கோரிக்கை:

ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம் தவுட்டுப்பாளையம் கிராமத்தை சோ்ந்த வெங்கடேசன் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோா் அளித்த மனு விவரம்: தவுட்டுப்பாளையம் அரசுப்பள்ளியில் படித்த எனது மகன் ராகவன், நண்பா்கள் நந்தகிஷோா், சிபினேஷ் ஆகியோா் ஆகியோா் கடந்த 10 ஆம் தேதி நாட்ராயன் நகா் பகுதியில் பயன்பாடு இல்லாத கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்தனா். பயன்பாடு இல்லாத இந்த கல்குவாரி குட்டைக்கு செல்ல முடியாதவாறு தடுப்பு வேலி அமைக்காததால் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனா்.

இதனால் சம்பந்தப்பட்ட கல்குவாரி குத்தகைதாரா் மீது நடவடிக்கை எடுத்து இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை:

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், வள்ளிபுரத்தான்பாளையம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் சிலா் அளித்த மனு விவரம்: வள்ளிபுரத்தான்பாளையம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சோ்ந்த மக்கள் சொந்த இடம் இல்லாமல் அரசு புறம்போக்கு, சாலையோரங்களில் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். அனைவருக்கும் அப்பகுதியில் உள்ள அரசு நிலத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் கோரிக்கை குறித்து ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT