ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 3,295 டன் யூரியா உரம் இருப்பு

21st May 2022 12:15 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 3,295 டன் அளவுக்கு இருப்பு உள்ளது என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.சின்னசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்துக்கு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஸ்பிக் நிறுவன யூரியா உரம் 704 டன், டி.ஏ.பி. உரம் 320 டன், காம்ப்ளக்ஸ் உரம் 320 டன், சென்னை மணலியில் இருந்து 636 டன் யூரியா உரம் ரயில் மூலம் கடந்த 16ஆம் தேதி ஈரோடு வந்தடைந்தது. இந்த உரங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

உரங்களின் அதிகப்பட்ச விற்பனை விலை மற்றும் இருப்பு விவரங்களை விலைப்பலகையில் தெளிவாக எழுதி கடை முன் விவசாயிகளுக்கு தெரியும்படி வைக்க வேண்டும். ரசீதில் விவசாயிகள் கையொப்பம் பெற்று உரங்கள் வழங்குவது, அனைத்து விற்பனையையும் விற்பனை முனைய கருவி (பிஓஎஸ்) மூலம் மட்டுமே விற்பனை செய்வது, உரிய முதன்மைச் சான்றுப் படிவங்களை நிறுவனங்களிடம் இருந்து பெற்று உரங்களை கொள்முதல் செய்வது ஆகிய நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

ADVERTISEMENT

உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பு வைத்திருக்க வேண்டும். உரங்களுடன் சோ்த்து பிற பொருள்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு வழங்கக் கூடாது. மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறைபாடுகள் இருந்தால் வட்டார வேளாண் உதவி இயக்குநரை விவசாயிகள் அணுகலாம்.

ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 3,295 டன், டி.ஏ.பி. உரம் 2,489 டன், பொட்டாஷ் உரம் 1,338 டன், காம்ப்ளக்ஸ் உரம் 5,933 டன், சூப்பா் பாஸ்பேட் உரம் 976 டன் என தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு இல்லாமல் யூரியா, டிஏபி உரங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT