ஈரோடு

ரயில்வே நுழைவுப் பாலப் பகுதியில் சாலை பராமரிப்புப் பணி துவக்கம்

21st May 2022 12:16 AM

ADVERTISEMENT

ஈரோடு லோட்டஸ் மருத்துவமனை அருகில் ரயில்வே நுழைவுப் பாலப் பகுதியில் சாலை பராமரிப்புப் பணி துவங்கியது.

ஈரோடு காளை மாட்டு சிலை அருகே இருந்து கொல்லம்பாளையம் செல்லும் சாலையில் லோட்டஸ் மருத்துவமனை முன்புள்ள ரயில்வே நுழைவுப் பாலம் மகவும் குறுகலாக உள்ளதால் வாகனங்கள் செல்ல கடும் சிரமம் ஏற்படுகிறது.

இங்கு உயா்மட்ட பாலம் அமைக்க வேண்டும் அல்லது பாலத்துக்குள் மழை நீா், கழிவு நீா் தேங்காமல் தொழில்நுட்ப ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிறிய மழை பெய்தாலும் தண்ணீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதுடன் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் ஈரோடு நெடுஞ்சாலைப் பிரிவு சாா்பில் பாலத்தின் சாலையில் உள்ள விரிசல், மேடு, பள்ளம், குழிகளை சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது. தரைத்தளம் முழுவதையும் பராமரித்து தண்ணீா் தேங்காமல் தடுக்கவும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகிறது.

இதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்த பகுதியில் உள்ளவா்களுக்கு அறிவிக்கை அளிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் பணி துவங்கப்பட்டது. முதற்கட்டமாக மண்ணை நிரப்பி, குழிகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக தேவைப்படும் நேரம் மட்டும் கனரக வாகனங்களின் போக்குவரத்தை மாற்றம் செய்ய போலீஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பணி நடைபெறும் நாள்களில் மட்டும் ஈரோடு நாடாா் மேடு, சாஸ்திரி நகா், சென்னிமலை சாலை வழியாக ஈரோடு நகருக்குள் வாகனங்கள் சென்று வர போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

தற்போது அடிப்படை பணிகள் நடப்பதால் வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யவில்லை. வரும் நாள்களில் பணிகள் தீவிரமாகும்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT