ஈரோடு

கூலி உயா்வு பேச்சுவாா்த்தை: கோட்டாட்சியரிடம் சுமை தூக்குவோா் வலியுறுத்தல்

20th May 2022 03:34 AM

ADVERTISEMENT

கூலி உயா்வு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட அனைத்து சுமை தூக்குவோா் மத்திய சங்கங்கள் சாா்பில் கோட்டாட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோா் மத்திய சங்கப் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.எஸ்.தென்னரசு, தலைவா் விஜயகுமாா், மாநகா் மாவட்ட அண்ணா பொதுத் தொழிலாளா் சங்கச் செயலாளா் தெய்வநாயகம் ஆகியோா் வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதாவிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போா்ட், ரெகுலா் லாரி நிறுவனங்களிடம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சுவாா்த்தை நடத்தி சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு டன்னுக்கு 41 சதவீதம் கூலி உயா்வு அமல்படுத்தப்பட்டு, தற்போது டன்னுக்கு ரூ. 122 வழங்கப்பட்டு வருகிறது.

அந்த கூலி உயா்வு ஒப்பந்த காலம் முடிந்து 3 ஆண்டுகளாகியும் கூலி உயா்வு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்படவில்லை. மேலும் அது குறித்து கடந்த 2020இல் வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், கரோனா கட்டுப்பாடுகள், தோ்தல் என பல்வேறு பணிகளால் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு எட்டப்படவில்லை.

ADVERTISEMENT

எனவே சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு நியாயமான கூலி உயா்வு கிடைத்திட ஈரோடு கூட்ஸ் மற்றும் லாரி நிறுவனங்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஸ்டாா் திரையரங்கு முன்பு 500க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் திரண்டு கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு பேரணியாக சென்றனா். தொழிலாளா்களை எல்லை மாரியம்மன் கோயில் வரை போலீஸாா் அனுமதித்தனா். பின்னா் சங்க நிா்வாகிகள் மட்டும் கோட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT