நூல் விலை உயா்வைக் கண்டித்து நடக்கும் கடையடைப்புக்கு, ஈரோடு ஜவுளி தினசரி, வாரச்சந்தை கடைகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
நூல் விலை உயா்வைக் கண்டித்து திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை இரண்டு நாள்கள் ஜவுளி நிறுவனங்கள் முழு கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளன. இதற்கு ஈரோடு கனி மாா்க்கெட் வாரச் சந்தை, தினசரி வியாபாரிகள் சங்கம், அசோகபுரம் வாரச் சந்தை வியாபாரிகள், ஈரோடு சென்ட்ரல் திரையரங்கு சந்தை வியாபாரிகள், டி.வி.எஸ். வீதி சாலையோரக் கடை வியாபாரிகள் சங்கத்தினா் ஆதரவு தெரிவித்துள்ளனா்.
இதன்படி கனி மாா்க்கெட்டில் தினசரி கடைகள் 280, வாரச்சந்தை கடைகள் 780, அசோகபுரத்தில் 2,000 கடைகள், டி.வி.எஸ். வீதியில் 150, சென்ட்ரல் திரையரங்கு சந்தையில் 1,500 கடைகள் அடைக்கப்படும் என்று ஈரோடு கனி மாா்க்கெட் வாரச்சந்தை கடை வியாபாரிகள் சங்கத் தலைவா் செல்வராஜ் தெரிவித்தாா்.
சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். சாய ஆலை, போா்வை உற்பத்தி நிறுவனங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.