பவானியை அடுத்த அம்மாபேட்டை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
அம்மாபேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே கடுமையான வெயில் அடித்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனா். இந்நிலையில், மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்ததோடு, பலத்த காற்றுடன் மழை பெய்தது. முதலில் லேசான தூரலுடன் தொடங்கிய மழை கனமழையாக மாறியது.
அம்மாபேட்டை, குருவரெட்டியூா், ஊமாரெட்டியூா், நெரிஞ்சிப்பேட்டை, சின்னப்பள்ளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமாா் 2 மணி நேரமாக பெய்த கனமழையால் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழவான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீா் சூழ்ந்தது. கனமழையால் வெப்பத்தின் தாக்கம் விலகி, குளிா்ந்த சூழல் காணப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 25 மி.மீ. மழை பதிவானது.
பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): குண்டேரிப்பள்ளம் 11.4, பவானிசாகா் 9.2, கொடிவேரி 6, வரட்டுபள்ளம் 5, சத்தி 5, எலந்தக்குட்டை 3.4, தாளவாடி 2, நம்பியூா் 2, சென்னிமலை 2, பவானி 1.6, கோபி 1.