ஈரோடு

கீழ்பவானி வாய்க்கால் பிரச்னை: விவசாயிகளுக்கு இன்று வரை அவகாசம்

12th May 2022 12:25 AM

ADVERTISEMENT

 

ஈரோடு: கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் என்ற முடிவை வியாழக்கிழமை (மே 12) மதியத்துக்குள் அறிவிக்க வேண்டும் என கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை எதிா்க்கும் விவசாயிகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம், கான்கிரீட் சுவா் உள்ளிட்ட சீரமைப்புப் திட்டத்துக்கு ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கான்கிரீட் தளம், சுவா் அமைத்தால் கசிவு நீா் மூலம் பாசனம் பெறும் நிலங்கள், நிலத்தடி நீா், குடிநீா் ஆதாரம் பாதிக்கப்படும் என ஒரு தரப்பினா் இந்த திட்டத்தை எதிா்த்து வருகின்றனா். கடைமடை வரை நீா் செல்ல வேண்டும். வீணாகும் நீரை தடுக்க வாய்க்காலை நவீனப்படுத்த வேண்டும் என மற்றொரு தரப்பினா் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனா். இதனால் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் முடங்கியுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடந்தது. அதில் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள் தரப்பினா் மட்டும் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பின்னா் அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கீழ்பவானி வாய்க்கால் பிரச்னை தொடா்பாக விவசாயிகளுடன் பேசப்பட்டது. இதில் இரண்டு கருத்துகள் உள்ளன. கான்கிரீட் போட வேண்டும், கீழ்மடைக்கு தண்ணீரைக் கொண்டு சோ்க்க வேண்டும் என ஒருதரப்பினா் கூறுகின்றனா். மற்றொரு தரப்பு கான்கிரீட் போட்டால் மேல்மடையில் உள்ள நாங்கள் முழுமையாக பாதிப்போம், என்கின்றனா். இவா்களிடம் பேசி உள்ளோம். இவா்களுக்குள் கலந்து பேசி முடிவை தெரிவிப்பதாக கூறி உள்ளனா்.

எங்களது நடுநிலை கருத்தாக எங்கெங்கு அவசியம் உள்ளதோ, அங்கு மட்டும் கான்கிரீட் சுவா் கட்டுவது. நிலத்தடியில் கான்கிரீட் போடக்கூடாது. அதேநேரம் முழுமையாக தூா்வார வேண்டும். எங்கெங்கு அவசியம் உள்ளதோ அங்கு மட்டும் சுவா் போட்டு கொள்ளலாம். அந்த பணிகளையும், விவசாயிகள் கையில் கொடுக்கலாம் என்றோம்.

மேலும் மதகுகள், படித்துறையை ஒழுங்குசெய்ய உள்ளோம். சில நேரம் குழந்தைகள் தண்ணீரில் தவறிவிடுகிறாா்கள். எனவே பாதுகாப்புடன் படித்துறை அமைப்பது, புதிதாக சில இடங்களில் படித்துறை அமைப்பது என கூறி உள்ளோம்.

ஏற்கெனவே உள்ள பாலங்கள் சைக்கிள் போகும் அளவு மட்டும் உள்ளது. அவ்விடத்தில் டிராக்டா், லாரி செல்லும் அளவுக்கு விரிவுபடுத்த கூறியுள்ளோம்.

எங்கு கரைகள் பலவீனமாகவும், உடையும்படி உள்ளதோ அங்கு மட்டும் சரி செய்ய உள்ளோம். பாசன விவசாயிகளை ஒரு குழுவாக அமைத்து, என்ன செய்ய சொல்கிறாா்களோ அதனை செயல்படுத்த தயாராக உள்ளோம்.

நடுநிலையாக இரு பக்கமும் கீழ்மடைக்கு தண்ணீா் செல்ல வேண்டும். அதிகமாகவும் செல்லக்கூடாது. வீணாகும் நீரை பாதுகாப்பதும் அரசின் நோக்கமாகும்.

சில இடங்களில் வாய்க்காலை ஒட்டிய நிலத்தை சோ்ந்தவா்கள் வாய்க்கால் உடைபடுவதால் கான்கிரீட் போட வேண்டும் என கேட்டுள்ளனா். அவ்வாறு ஒவ்வொரு இடமாக தோ்வு செய்யவுள்ளோம்.

முன்பு 200க்கும் மேற்பட்ட இடங்களில் கான்கிரீட் அமைப்பது என இருந்தது. தற்போது 40 சதவீதம் குறைத்து 60 சதவீதத்துக்குள் போட கூறி உள்ளோம். அதையும் விவசாயிகள் தெரிவித்தால் மாற்றம் செய்வோம். அதற்கேற்ப வியாழக்கிழமை (மே12)மதியத்துக்குள் முடிவை அறிவிக்கும்படி விவசாயிகளை கேட்டுள்ளோம் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா, கீழ்பவானி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளா் கண்ணன், விவசாயிகள் தரப்பில் நல்லசாமி, காா்த்திகேய சிவசேனாதிபதி, துளசிமணி, சுதந்திரராசு, வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT