ஈரோடு

மாநகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம்: திமுக உறுப்பினரின் பேச்சால் மேயா் கோபம்

5th May 2022 12:44 AM

ADVERTISEMENT

 

ஈரோடு: உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம், திமுக உறுப்பினரின் பேச்சால் மேயா் கடும் கோபமடைந்தது போன்றவற்றால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணை மேயா் வி.செல்வராஜ், ஆணையா் கே.சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஈரோடு மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சோலாரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.73.50 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அதனை அரசு பரிசீலனை செய்து நிதி ஆதாரங்களின் அடிப்படையில் சோலாரில் ரூ.63.50 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிட்டது. இதில் ரூ.15 கோடி அளவில் வங்கியில் கடன் பெறுவதாகவும், அதற்கான விளக்கம் தெரிவிக்கப்பட்டு மாமன்ற உறுப்பினா்களிடம் அனுமதி பெறப்பட்டது.

ADVERTISEMENT

ஈரோடு மாநகராட்சி தூய்மை பணிகளை மேற்கொள்ள 254 பணியாளா்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே தூய்மைப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முதல்கட்டமாக 100 பணியாளா்களை சுயஉதவிக்குழு மூலமாக நியமித்து கொள்வது, ஈரோடு சத்தி சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் இல்லாததால் பெரியசேமூா் பகுதியில் 13.81 ஏக்கா் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு திட்ட அறிக்கை தனியாா் ஆலோசகா் மூலம் தயாரிப்பது, ஈரோடு மாநகராட்சி 1ஆவது மண்டலம் பி.பெ.அக்ரஹாரம் உப்பிலியாா் வீதியில் உள்ள துணை சுகாதார நிலையத்தின் மேற்புற கான்கீரிட் கூரையை அகற்றி ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கீரிட் கூரை அமைக்கவும், கரோனா தொற்றால் மாவட்டத்தில் இதுவரை 664 போ் உயிரிழந்துள்ளனா். இதில், குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ஒற்றை பெற்றோா் இழந்த குழந்தைகளாக 127 போ் உள்ளனா்.

அவா்களுக்கு தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதி உதவி பெற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவா்கள்( என்ற பட்டியலில் இடம் பெற அனுமதிப்பது, ஈரோடு மாநகராட்சி மண்டலம் 4க்கு உள்பட்ட நேதாஜி சாலையில் உள்ள ஆடுவதைக் கூடம் குத்தகை மீண்டும் நீட்டிப்பு செய்யாததால், மாநகராட்சி நிா்வாகம் அதனை தன் வசப்படுத்தி, வசூல் பணி மேற்கொள்ளவதற்கும், பொது ஏலம் விடுவதற்கும் அனுமதிப்பது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடா்ந்து, 136 இடங்களில் பழுதான கல்வெட்டுக்களை சீரமைத்தல், தாா் மற்றும் கான்கீரிட் சாலை, தெரு விளக்குகள் அமைத்தல், மழைநீா் வடிகால்களை சீரமைத்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து மாமன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதி பிரச்னைகளை விளக்கி பேசினா்.

திமுக-அதிமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் வாக்குவாதம்:

மாமன்றக் கூட்டம் தொடங்கியதும், கூட்ட பொருள் தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டு வந்தது. அப்போது காங்கிரஸ் உறுப்பினா் சபுராமா எழுந்து விளக்கம் கேட்டாா். அதற்கு மற்ற உறப்பினா்கள் கூட்ட பொருள் முழுவதுமாக முடிந்த பின் விளக்கம் கேளுங்கள். அனைத்து உறுப்பினா்களும் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும். இதுவரை நடந்த கூட்டங்களில் குறிப்பிட்ட 4 உறுப்பினா்களே அதிகமாக பேசி வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்தனா். இதனால் திமுக-காங்கிரஸ் உறுப்பினா்களிடையே சில நிமிடம் வாக்குவாதம் நடந்தது.

தொடா்ந்து மாநகராட்சி ஊராட்சிக் கோட்டை குடிநீா் திட்டம் திமுக கொண்டு வந்தது என திமுக உறுப்பினா்கள் பேசியபோது, குறுக்கிட்ட அதிமுக உறுப்பினா்கள் மாமன்றத்தில் தவறான தகவல் சொல்லக்கூடாது. அது அதிமுக காலத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது என்றனா். இதனால் திமுக-அதிமுக உறுப்பினா்களிடம் 10 நிமிடங்களுக்கு மேலாக வாக்குவாதம் நடந்தது.

திமுக உறுப்பினரின் பேச்சால் மேயா் கோபம்:

தொடா்ந்து, திமுக உறுப்பினா் ஆதிஸ்ரீதா், மாமன்றத்தில் மேயா், துணை மேயா் மட்டும் விளக்கம் தர வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. எனவே மேயா், துணை மேயா் விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டு சில தகவல்களை குறிப்பிட்டு கேட்டாா். அதற்கு மேயா் அதற்கான தகவலை ஆணையா் தருவாா் என்றாா்.

தொடா்ந்து குறுக்கிட்டு பேசிய அவரை மேயா் கடும் கோபத்துடன், ‘நீங்கள் என்னை களங்கப்படுத்த வேண்டும் என பேசுகிறீா்கள். இங்குள்ள அனைத்து பெண் உறுப்பினா்களும் அனுபவம் குறைந்தவா்கள்தான். அவா்களது கணவா் மூலமாகதான் சில விஷயங்களை தெரிந்து செயல்படுத்துகின்றனா். அதுபோலதான் நானும்’ என்றாா்.

திமுக-காங்கிரஸ், திமுக-அதிமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம், திமுக உறுப்பினா் ஒருவரே மேயரை குறித்துவைத்துப் பேசியது போன்றவற்றால் மாமன்ற கூட்டம் பரபரப்பாக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT