ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே விவசாயியைக் கொலை செய்து 25 பவுன், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
சென்னிமலையை அடுத்த உப்பிலிபாளையம் குட்டக்காட்டு புதூரைச் சோ்ந்தவா் துரைசாமி (68). விவசாயி. இவரது மனைவி ஜெயமணி (66). இவா்களுக்கு திருமணமான 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மகள்கள் சென்னிமலையிலும், மகன் கோவையிலும் வசித்து வருகின்றனா். துரைசாமி, ஜெயமணி மட்டும் தனியாக வசித்து வந்தனா்.
இந்நிலையில், துரைசாமியும், ஜெயமணியும் சனிக்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு, வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, நள்ளிரவில் துரைசாமியின் முகத்தில் மா்ம நபா்கள் ஆயுதத்தால் குத்தியும், வெட்டியும் உள்ளனா். பின்னா் ஜெயமணியின் கழுத்தை கத்தியால் அறுத்த மா்ம நபா்கள், வீட்டினை திறந்து, பீரோவை உடைத்து அதிலிருந்த பணத்தையும், ஜெயமணி மற்றும் துரைசாமி அணிந்திருந்த நகை உள்பட 25 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனா். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்பது குறித்து தெரியவில்லை.
இதையடுத்து, துரைசாமியின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பால்காரா் வந்தபோது, வீட்டின் வாசலில் துரைசாமி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டிருப்பதையும், ஜெயமணி படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதையும் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். பின்னா் மீட்கப்பட்ட ஜெயமணி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சென்னிமலை போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசிமோகனும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தாா். தடயவியல் நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.