ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் தினத்தையொட்டி பல்வேறு சங்கங்கள் சாா்பில் ஊா்வலம் மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட தொழிலாளா் முன்னேற்ற சங்க பேரவை கவுன்சில் சாா்பில் நடைபெற்ற மே தின ஊா்வலத்தை தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தொடங்கிவைத்தாா்.
முன்னதாக, நலிவடைந்த சங்க உறுப்பினா்கள் 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. வ.உ.சி. பூங்காவில் தொடங்கிய ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று பன்னீா்செல்வம் பூங்காவில் நிறைவடைந்தது.
முன்னதாக, அனைத்து கிளைகளிலும் சங்க கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி மேயா் நாகரத்தினம், திமுக மாவட்ட துணைச் செயலாளா்கள் செந்தில்குமாா், செல்லப்பொன்னி, மாவட்டப் பொருளாளா் பழனிசாமி, மாநகரச் செயலாளா் சுப்பிரமணியம், தொமுச கவுன்சில் செயலாளா் கோபால், பொருளாளா் தங்கமுத்து, டாஸ்மாக் தொழிலாளா் சங்கத் தலைவா் முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
சிஐடியூ - ஏஐடியூசி மே தின ஊா்வலம்: மே தினத்தையொட்டி சிஐடியூ மற்றும் ஏஐடியூசி சாா்பில் ஊா்வலம் மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசு மருத்துவமனை அருகில் தொடங்கிய ஊா்வலம் வீரப்பன்சத்திரத்தில் முடிவடைந்தது. தொடா்ந்து, பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளுக்கு ஏஐடியூசி சுமைதூக்கும் தொழிலாளா் சங்கத் தலைவா் எஸ்.டி.பிரபாகரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சண்முகம், ஏஐடியூசி மாநிலச் செயலாளா் சின்னசாமி, சிஐடியூ மாவட்டப் பொருளாளா் மாரப்பன், ஏஐடியூசி வட்டார செயலாளா் சிவராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் முனுசாமி ஆகியோா் பேசினா்.
விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் சண்முகவள்ளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.