ஈரோடு

மது விற்றவரை பிடிக்க முயன்ற காவல் துறைஉதவி ஆய்வாளா் கீழே விழுந்து காயம்

22nd Mar 2022 12:26 AM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூா் பகுதியில் மது விற்றவரை பிடிப்பதற்காக விரட்டிச் சென்றபோது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் காவல் துறை உதவி ஆய்வாளா் பலத்த காயம் அடைந்தாா்.

நம்பியூா் அருகே உள்ள வரப்பாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக ராஜமாணிக்கம் (57) பணியாற்றி வருகிறாா். நம்பியூா் அருகே உள்ள கெடாரை பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக வரப்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு காவல் துறை உதவி ஆய்வாளா் ராஜமாணிக்கம், போலீஸாா் இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, கெடாரை பகுதியில் ஒருவா் இருசக்கர வாகனத்தில் மது விற்பது தெரியவந்தது. உடனடியாக அவரை பிடிப்பதற்காக போலீஸாா் அங்கு சென்றனா். இதைப் பாா்த்த அந்த நபா் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பினாா். போலீஸாரும் விரட்டிச் சென்றனா்.

காவல் துறை உதவி ஆய்வாளா் ராஜமாணிக்கம் அந்த நபரின் சட்டையைப் பிடித்து இழுத்தபோது, 2 பேரும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனா். இதில், உதவி ஆய்வாளா் ராஜமாணிக்கம் படுகாயம் அடைந்தாா். மது விற்ற நபரின் வாகனத்தில் வைத்திருந்த மதுபாட்டில்கள் கீழே விழுந்து உடைந்தது. இதையடுத்து, அந்த நபா் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பினாா். இதனிடையே படுகாயம் அடைந்த உதவி ஆய்வாளா் ராஜமாணிக்கத்தை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோபியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து வரப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, நம்பியூா் அருகே உள்ள ராயா்பாளையம் பகுதியைச் சோ்ந்த வேலன் (எ) வேலுசாமி என்பவரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT