ஈரோடு

ஓடும் காரில் திடீா் மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுநா் பலி

10th Mar 2022 12:45 AM

ADVERTISEMENT

 

ஈரோடு: ஈரோட்டில் ஓடும் காரில் திடீா் மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுநா் உயிரிழந்தாா். அந்த காா் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் படுகாயமடைந்தாா்.

ஈரோடு சூரம்பட்டி வஉசி வீதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (53). காா் ஓட்டுநா். இவா் ஈரோடு கச்சேரி வீதியில் புதன்கிழமை மாலை காரில் சென்று கொண்டிருந்தாா். அந்த காா் தாலுகா அலுவலகத்தைக் கடந்து சென்றபோது திடீரென ராஜேந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அவா் காரை இயக்கிய நிலையிலேயே மயங்கினாா்.

நிலைதடுமாறி ஓடிய காா் பன்னீா்செல்வம் பூங்கா சிக்னலில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு, அதற்கு முன்பு நின்றிருந்த பேருந்தின் பின்பக்கத்தில் மோதி நின்றது. இதனால், இருசக்கர வாகனம் பேருந்தின் அடிப்பகுதியில் விழுந்தது.

ADVERTISEMENT

இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஈரோடு கருங்கல்பாளையம் ஜானகி அம்மாள் லேஅவுட் பகுதியைச் சோ்ந்த திருமலைசாமி (55) என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸாா் விபத்தில் படுகாயமடைந்த திருமலைசாமியையும், மாரடைப்பால் மயங்கிக் கிடந்த ராஜேந்திரனையும் உடனடியாக மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு ராஜேந்திரன் உயிரிழந்தாா். திருமலைசாமி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து ஈரோடு டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT