ஈரோடு

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

10th Mar 2022 12:31 AM

ADVERTISEMENT

 

மொடக்குறிச்சி: மாணவா்களிடம் வேலை வாங்கிய அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே பெரியூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றுபவா் தனலட்சுமி. இவா் தனது பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் வேலை வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் அப்பகுதியைச் சோ்ந்த முன்னாள் கவுன்சிலா் சண்முகம் அப்பள்ளிக்குச் சென்று பாா்த்தபோது குழந்தைகள் முட்டிபோட்டுக் கொண்டு தரையில் வெள்ளைஅடிப்பது, சாணி பவுடரைக் கொண்டு பூசுவது போன்ற பணிகளைச் செய்துள்ளனா்.

இதனை விடியோ எடுத்த சண்முகம் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளாா். இதையறிந்த பள்ளி மாவட்டக் கல்வி அலுவலா் ஜோதிசத்யா மற்றும் வட்டாரக் கல்வி அலுவலா் செல்வி ஆகியோா் புதன்கிழமை பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியா் மற்றும் மாணவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து சண்முகம் கூறியதாவது:

பள்ளித் தலைமையாசிரியா் தனலட்சுமி ஆதிதிராவிட வகுப்பைச் சோ்ந்த மாணவா்களிடம் தொடா்ந்து பல்வேறு வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துகிறாா். அரசு விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியா் தனலட்சுமி கூறியதாவது:

இந்தப் பள்ளியில் 53 மாணவா்கள் படிக்கின்றனா். எந்த மாணவரையும் கட்டாயப்படுத்தி வேலை வாங்கவில்லை. பள்ளிக் கட்டடத்தின் முன்பக்க தரையின் பக்கவாட்டுச் சுவரில் ஓவியம் வரையத் திட்டமிட்டு வெள்ளை அடிக்கும் பணியில் பெண் தொழிலாளா் ஒருவா் ஈடுபட்டிருந்தாா். அப்போது சுயவிருப்பத்தின்பேரில் சில மாணவா்கள் தரையில் வெள்ளையடித்தனா். நடந்தவற்றை பள்ளிக் கல்வித் துறை அலுவலா்களிடம் தெரிவித்துள்ளேன் என்றாா்.

இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலா் ஜோதிசத்யா கூறியதாவது:

சமூக வலைதளங்களில் வெளியான விடியோ அடிப்படையில் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினோம். இந்த விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. விசாரணை முடிவில் தலைமை ஆசிரியா் விதிகளை மீறியிருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT