சத்தியமங்கலம்: நடக்க முடியாமல் தவிக்கும் சிறுத்தைக்கு பவானிசாகா் வனகால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனச் சரகப் பகுதியில் உள்ள காராச்சிக்கொரை பகுதியில் வன கால்நடை மருத்துவ மையம் உள்ளது. வனப் பகுதியில் வசிக்கும் உடல்நலம் குன்றிய வன விலங்குகளுக்கு இந்த கால்நடை மருத்துவ மையத்தில் வன கால்நடை மருத்துவா் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகம், பண்ணப்பட்டி கோம்பை வனப் பகுதியில் நடக்கமுடியாமல் உடல் நலம் குன்றிய நிலையில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத் துறையினா் மயக்க ஊசி செலுத்தி மீட்டனா். சிறுத்தையை கூண்டில் அடைத்து, மேல்சிகிச்சைக்காக பவானிசாகா் வன கால்நடை மருத்துவ மையத்துக்கு அனுப்பிவைத்தனா். நடக்க முடியாமல் உள்ள ஐந்து வயதுடைய ஆண் சிறுத்தைக்கு வன கால்நடை மையத்தில் மருத்துவக் குழுவினா் நரம்பு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். சிறுத்தையின் உடல் நிலை சீராகும் வரை தொடா் சிகிச்சை அளிக்கப்படும் என கால்நடை மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.