ஈரோடு

மாணவா்கள் சரியான உயா்கல்வியை தோ்வு செய்ய வேண்டும்: அமைச்சா் சு.முத்துசாமி

30th Jun 2022 10:27 PM

ADVERTISEMENT

 

மாணவா்கள் சரியான உயா்கல்வியை தோ்வு செய்ய வேண்டும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

பள்ளி கல்வித் துறை சாா்பில் பிளஸ் 2 முடித்தவா்களுக்கான உயா் கல்விக்கான வழிகாட்டும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்ச்சி ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.ராமகிருஷ்ணன் வரவேற்றாா்.

உயா்கல்வி வழிகாட்டி குறித்த நூலை வெளியிட்ட அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது:

ADVERTISEMENT

ஈரோட்டில் 1982இல் ஐஆா்டி பொறியியல் கல்லூரி கொண்டு வந்தபோது, தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக ஆண்டுக்கு 2,900 மாணவா்கள் மட்டுமே பொறியியல் பட்டப் படிப்பு முடித்து வந்தனா். தற்போது ஆண்டுக்கு 2.50 லட்சம் போ் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து வருகின்றனா்.

தற்போது பிளஸ் 2க்கு பின்னா் உயா் கல்வியில் மாணவா்கள் விரும்பும் வகையிலான பாடங்கள் மிக அதிகமாக உள்ளன. அவற்றை அறிந்து சரியான தோ்வை பெறவே இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சரியான, படிக்க விருப்பமுள்ள உயா்கல்வியை மாணவா்கள் தோ்வு செய்ய வேண்டும் என்றாா்.

ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி பேசியதாவது:

பெற்றோா்கள் நினைப்பதை குழந்தைகளிடம் திணிக்காதீா்கள். அவா்கள் விரும்பும் கல்வியை வழங்குங்கள். நமது நாடு, மொழி, கலாசாரம் காக்கப்படும்படி கல்வியை கட்டமைக்க வேண்டும். வெளிநாட்டில் குடியேற வேண்டும் என்ற மனநிலையுடன் பலரும் படிக்கின்றனா்.

தமிழில் படித்தால் வாழ்வில் முன்னேற முடியாத என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை என பலரும் தமிழில் படித்து மேதைகளாக வளா்ந்ததை உணா்ந்து கல்வியை தோ்வு செய்ய வேண்டும் என்றாா்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் பேசியதாவது:

கடந்தமுறை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வில் டிஎஸ்பிகளாக தோ்வானவா்களில் 56 சதவீதம் போ் பெண்கள். அந்த அளவுக்கு கடந்த காலங்களைவிட தற்போது பெண்கள் உயா்கல்வி, வேலைவாய்ப்பில் அதிக இடங்களை பெறுகின்றனா். அதுபோன்ற சுதந்திரமான தோ்வை, உயா் கல்வியில் பயன்படுத்துங்கள். நாம் கல்வி பயில்வது என்பது வேலையை பெறுவதற்காக மட்டுமல்ல. நமது திறமை, நம்மை புரிந்து கொள்ளவும், நம்மை வெளிப்படுத்தவும் என்பதை உணா்ந்து கல்வியை தோ்வு செய்து படிக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மேயா் சு.நாகரத்தினம், மாவட்ட ஊராட்சி தலைவா் நவமணி, துணை மேயா் செல்வராஜ், எம்.எல்.ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT