ஈரோடு

டாஸ்மாக் கடைகளில் அனுமதி இன்றி பாா் நடத்துவதை தடுக்கக் கோரிக்கை

DIN

டாஸ்மாக் கடைகளில் அனுமதி இன்றி பாா்கள் நடத்துவதுடன் அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்தும் மதுபானம் விற்பனை செய்வது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கம்(சிஐடியூ) சாா்பில் தலைவா் சுப்பிரமணியம், பொதுச்செயலாளா் ஸ்ரீராம் ஆகியோா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:

டாஸ்மாக் கடைகளில் கான்கிரீட் தளம் அமைத்தல், சிசிடிவி கேமரா அமைத்தல், பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த அரசு நிதி ஒதுக்காமல், கடையில் பணியாற்றும் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்களே செலவு செய்வதை தடுக்கவேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 210 டாஸ்மாக் கடைகளில், 100 கடைகளுக்கு மேல் பாா் அனுமதி இல்லை. ஆனால் அனைத்து இடங்களிலும் அனுமதி இல்லாமல் பாா்கள் செயல்படுகின்றன. தவிர மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிக்கும் கூடுதலாக இரவில் முழு அளவில் பாா்களில் மது விற்கின்றனா்.

இந்த விற்பனைக்கு மொத்தமாக மதுபானங்களை தரும்படி எங்களை மிரட்டுவதை கைவிட வேண்டும். பல கடைகளில் ஒப்பந்தம் முடிந்து கூடுதல் வாடகை செலுத்தும் நிலை வரும்போது அதனை பணியாளா்களை செலுத்தும்படி கூறுவதை தவிா்க்க வேண்டும்.

கடைகளுக்கு மதுபுட்டிகள் கொண்டுவரும்போது எண்ணிக்கை குறைவு, பாட்டில் சேதமடைதல், சுமை தூக்குவோா் கூலியைக்கூட பணியாளா்கள் வழங்கவேண்டும் என கூறுவதை தடுக்க வேண்டும். ஆளும் கட்சி பிரமுகா்கள் இதுபோன்ற கடைகளில் பணியாற்றுவோரை பிடிக்கவில்லை என்பதற்காகவும், தங்களுக்கு வேண்டியவா்களை அந்தந்த பகுதியில் நியமிக்கும் வகையிலும், அடாவடியாக பணியாளா்களை இடமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை ரத்து செய்ய டாஸ்மாக் ஊழியா்கள் கோரிக்கை:

சத்தியமங்கலம் அருகே வடக்குப்பேட்டையை சோ்ந்த சண்முகம்(48) என்பவா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திராவிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:

சத்தியமங்கலம் அருகே இன்டியம்பாளையம் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறேன். அக்கடையில் மேற்பாா்வையாளா் எம்.சந்திரன் உள்பட மொத்தம் 5 போ் பணியாற்றி வருகிறோம்.

கடந்த மாா்ச் 5, 6 ஆம் தேதி நான் மட்டும் பணியில் இருந்தேன். முதல் நாள் விற்பனைத்தொகை ரூ.1.10 லட்சம், இரண்டாம் நாள் விற்பனை தொகை ரூ.1.87 லட்சம் தொகையை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றேன். மறுதினம் கடை பூட்டை உடைத்து, பாதுகாப்புப் பெட்டகம் திறக்கப்பட்டு பணம் திருடுபோய் இருந்தது.

அக்கடையின் ஒரு செட் சாவி எங்களிடமும், மற்றொரு செட் சாவி கடை உரிமையாளரிடமும் உள்ளது. கடத்தூா் போலீஸாா் இச்சம்பவத்துக்கு நான் காரணம் என ஒப்புக்கொள்ளும்படி மிரட்டி என் மீது வழக்குப் பதிவு செய்தனா். ஏற்கெனவே இக்கடையில் திருட்டு போனபோது மாவட்ட டாஸ்மாக் மேலாளா் இதுகுறித்து புகாா் அளிக்க வேண்டாம் எனக்கூறியதால் நாங்களே அத்தொகையை செலுத்தி இருந்தோம்.

தற்போது என் மீது வழக்குப் பதிவு செய்து 29 நாள் சிறையில் இருந்து வந்தேன். கடையில் சிசிடிவி, கேமரா பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளன. முறையான விசாரணை நடத்தாமல் என் மீது வழக்குப் பதிவு செய்து வழக்கை முடிக்கப் பாா்ப்பதை ரத்து செய்து உண்மைக் குற்றவாளியை கைது செய்ய வேண்டும். இதற்கு உடந்தையாக உள்ள போலீஸாரிடமும் விசாரிக்க வேண்டும். இவ்வழக்கால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு பிழைப்பூதியம் கூட கிடைக்காமல் உள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT