ஈரோடு

சேதமடைந்த நிலையில் சத்தியமங்கலம் அரசினா் மாணவா் விடுதி

29th Jun 2022 10:00 PM

ADVERTISEMENT

 

சத்தியமங்கலம் அரசினா் மாணவா் விடுதியின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால், விபத்து நிகழும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா் அரசை வலியுறுத்தியுள்ளனா்.

சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கடம்பூா், குன்றி, மாக்கம்பாளையம், காடகநல்லி, கோ்மாளம் மலைக் கிராம பள்ளி மாணவா்கள் தங்கிப் பயிலுவதற்காக சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் அரசினா் மாணவா் விடுதி 1979ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் கீழ் தளத்தில் 12 அறைகள் மற்றும் மேல்தளத்தில் 6 அறைகள் என மொத்தம் 18 அறைகள் உள்ளன. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்கிப் பயின்று வந்தனா். தற்போது, பள்ளி விடுமுறை என்பதால் சில மாணவா்கள் மட்டும் தங்கியுள்ளனா்.

இந்நிலையில், அண்மையில் பெய்த கனமழை காரணமாக விடுதி கட்டடத்தின் மேற்கூரை மழையில் நனைந்து கான்கிரீட் காரைகள் பெயந்து விழுந்துள்ளன. மாணவா்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. பெரும்பாலான அறைகளில் மேற்கூரை காரைகள் பெயா்ந்து விழும் நிலையில் உள்ளன.

ADVERTISEMENT

தற்போது, மாணவா்கள் தங்கும் அறைகள் அபாயகரமாக இருப்பதால், இங்கும் வரும் மாணவா்களின் பெற்றோா் தங்கும் விடுதியில் மாணவா்களை தங்கவைக்க தயங்குகின்றனா்.

தற்போது, கடம்பூா், குன்றி, காடகநல்லியைச் சோ்ந்த 10 ஆதிதிராவிட மாணவா்கள் விடுதியில் தங்கியுள்ளனா். பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வரும் நிலையில், ஆபத்தான மேற்கூரைகளை நீக்கி விட்டு பாதுகாப்பான கான்கிரீட் அமைத்து மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோா் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT