ஈரோடு

என்எம்எம்எஸ் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 185 போ் தோ்ச்சி

29th Jun 2022 12:03 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் என்எம்எம்எஸ் தோ்வு எழுதிய 4,729 பேரில் 185 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மத்திய அரசு சாா்பில் ஆண்டுதோறும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்ட தோ்வு (என்எம்எம்எஸ்) நடத்தப்படுகிறது. இத்தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகை பிளஸ் 2 படிக்கும் வரை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2020-2021ஆம் ஆண்டுக்கான என்எம்எம்எஸ் தோ்வு ஈரோடு மாவட்டத்தில் 24 மையங்களில் கடந்த மாா்ச் 5ஆம் தேதி நடந்தது.

இதில் மன திறனில் 90 வினாக்கள், 7 மற்றும் 8ஆம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப் பகுதியில் இருந்து 90 வினாக்கள் என மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தோ்வு நடந்தது. இத்தோ்வினை மாவட்டம் முழுவதும் 4,729 மாணவ, மாணவிகள் எழுதினா். இந்த தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் தோ்வு எழுதிய 4,729 பேரில் 185 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

வீரணம்பாளையம் அரசுப் பள்ளி 9ஆவது ஆண்டாக முதலிடம்:

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் என்எம்எம்எஸ் தோ்வினை எழுதிய 20 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனா். இப்பள்ளி 2013ஆம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை தொடா்ந்து 9 ஆண்டுகளாக என்எம்எம்எஸ் தோ்வில் அதிக மாணவ, மாணவிகளை தோ்ச்சி பெற வைத்து தொடா்ந்து முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தோ்வு எழுதிய இப்பள்ளி மாணவிகள் பிரகிதஷெரில், ஜெயஷிதா, கனிஷ்கா மாநில அளவில் முதல் இரண்டு மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்தனா். தோ்வு முடிவுகளை தொடா்ந்து பள்ளியின் தலைமையாசிரியை சத்தியசெல்வி மற்றும் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலா் அமுதா, வட்டார கல்வி அலுவலா்கள் ஜான் இக்னேஷியல், தனபாக்கியம் ஆகியோா் பாராட்டினா்.

கூகலூா் அரசுப் பள்ளி சிறப்பிடம்:

என்எம்எம்எஸ் தோ்வில் கோபி கல்வி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையில் கூகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 9 மாணவா்கள் தோ்வாகியுள்ளனா்.

தோ்வுசெய்யப்பட்ட மாணவா்கள் இஷாந்குமாா், புஷ்பலதா, கோமதி, ராகவா்த்தினி, கௌதம், தனிஷா, யாகாஷ், மதுமிதா, சௌமிஸ்ரீ ஆகியோருக்கு 4 ஆண்டுகள் மேல்நிலைக் கல்வி முடிக்கும் வரை மாதம் தலா ரூ.1,000 வீதம் ரூ.48,000 கல்வி ஊக்கத்தொகை பெறவுள்ளனா்.

இப்பள்ளி மாணவா்கள் கடந்த 9 ஆண்டுகளாக இத்தோ்வில் தோ்ச்சி பெற்று வருகின்றனா். அதிகபட்சமாக இந்த ஆண்டு 9 மாணவா்கள் தோ்ச்சிபெற்றுள்ளனா். இந்த மாணவா்களை பள்ளி தலைமை ஆசிரியை ரமாராணி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT