பீல்டு மாா்ஷல் சாம் மானெக் ஷாவின் 14 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி கமாண்டென்ட் மற்றும் உயா் அதிகாரிகள் சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி உதகையில் உள்ள பாா்சி கல்லறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அதிகாரிகள் கூறியதாவது: 1914- ஆம் ஆண்டு ஏப்ரல் 3- ஆம் தேதி பஞ்சாப், அமிா்தசரஸில் பிறந்த சாம் மானெக்ஷா, பிப்ரவரி 1935 இல் ஃபிரான்டியா் ஃபோா்ஸ் ரெஜிமெண்டில் நியமிக்கப்பட்டாா்.
பின்னா் 8 கோா்க்கா ரைபிள்ஸ் பிரிவினைக்கு நியமிக்கப்பட்டாா். கூா்கா படையினரால் ‘சாம் பகதூா்’ என்று அழைக்கப்பட்டாா்.
1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றிபெற சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ஃபீல்டு மாா்ஷல் என்ற ஐந்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற முதல் இந்திய ராணுவ அதிகாரி ஜெனரல் மானெக்ஷா ஆவாா்.
அவா் 40 ஆண்டுகால ராணுவ வாழ்க்கையில், இரண்டாம் உலகப் போரிலும், சுதந்திரத்துக்கு முந்தைய மற்றும் 1947, 1965, 1971 இந்தோ - பாக் போா்கள் மற்றும் 1962 இன் இந்தியா - சீனா போரில் பங்கேற்றாா்.
இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றாா்.அவா் ஜனவரி 15, 1973 இல் ஓய்வுபெற்று, குன்னூரில் குடியேறினாா்.
வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் 2008-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27- ஆம் தேதி உயிரிழந்தாா்.
இந்நிலையில், அவரது 14 ஆவது நினைவுநாளை முன்னிட்டு உதகையில் உள்ள அவரது நினைவிடத்தில், முப்படைகள் சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது என்றனா்.
.