ஈரோடு

குடும்பங்களை ஒதுக்கிவைக்கும் செயலைத் தடுக்கக் கோரிக்கை

28th Jun 2022 12:45 AM

ADVERTISEMENT

ஜாதிக் கட்டுப்பாடு என்ற பெயரில் குடும்பங்களை ஒதுக்கிவைக்கும் செயல்களைத் தடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கொங்கு குலாலா் சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் சிலா் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டம், பூந்துறையில் உள்ளது பெரியகாண்டியம்மன், அண்ணன்மாா் கோயில். கொங்கு குலாலா் சமுதாயத்தின் பூந்துறை நாடு குலத்துக்குச் சொந்தமான இந்த கோயில் 1,200க்கும் மேற்பட்ட குடும்பங்களின் பொதுக் கோயிலாக உள்ளது.

1,200 குடும்பங்களும் 37 குழுக்களாக பிரிக்கப்பட்டு குழுக்களுக்கு தனியாக குலதெய்வ கோயில்கள், பூந்துறையில் பொதுக்கோயிலும் உள்ளது. இந்த குடும்பத்தினா் குலதெய்வ கோயிலுக்கும், பொதுக்கோயிலுக்கும் மாங்கல்ய வரி என்ற குடியுரிமைக்கான வரியை செலுத்தி வருகின்றனா். தவிர குடும்ப விழாக்களுக்கும் வரி செலுத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

இதனிடையே கொங்கு குலாலா் அல்லாத வேறு பிரிவு, வேறு ஜாதி அல்லது மதத்தில் திருமணம் செய்தால் அந்த நபரையும், குடும்பத்தையும், குடும்பத்துடன் உறவு வைத்துள்ளவா்களையும் கோயில் வழிபாடு, உறவினா்களுடனான தொடா்பில் இருந்தும் முற்றுலுமாக விலக்கிவைக்கப்படுகின்றனா்.

இதுவரை சுமாா் 70 குடும்பங்கள் இதுபோல விலக்கிவைக்கப்பட்டுள்ளன. இதனால் சொந்த சமூகத்தினருடன் இணைந்து தொழில் செய்ய இயலாமை, உறவினா் இல்ல நிகழ்வுகளில் பங்கேற்க முடியாதது போன்ற துயரத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

இதில், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கட்டுப்பாடு என்ற பெயரில் குடும்பங்களை ஒதுக்கிவைக்கும் நடைமுறையைத் தடுக்கவும், ஏற்கனவே ஒதுக்கிவைக்கப்பட்டவா்கள் மீண்டும் குலதெய்வ கோயில் நடவடிக்கைகளில் பங்கேற்கவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசு ஏற்படுத்தும் கிடங்கு அமைக்க எதிா்ப்பு: ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டம், சென்னிமலைப்பாளையம், மாடுகட்டுப்பாளையம், துலுக்கம்பாளையம், வாய்ப்பாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: வாய்ப்பாடி கிராமத்தில் தனியாா் நிறுவனம் பலநூறு ஏக்கா் நிலங்களை பொதுமக்களிடமிருந்து வாங்கியுள்ளது.

மேலும் நிலங்களை வாங்கும் முயற்சியிலும் உள்ளது. அந்த நிறுவனம் இங்கு நிலக்கரி சேகரித்து வைக்கும் கிடங்கு அமைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு குன்றினை அழிக்கவும் திட்டமிட்டுள்ளது. இங்கு கோயில் மற்றும் கிராம மக்கள் பயன்படுத்தும் பொதுக்களம் உள்ளது.

இங்கு நிலக்கரி சேமிப்புக் கிடங்கு அமைத்தால் வாய்ப்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் காற்று மாசு ஏற்படும். ஏற்கெனவே சிப்காட் நிறுவனத்தால் கடும் மாசு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வாய்ப்பாடி கிராமத்தில் குடியேறி வருகின்றனா்.

இதனைக் கவனத்தில் கொண்டு மாசு ஏற்படுத்தும் நிலக்கரி சேமிப்புக் கிடங்கு அமைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதியளிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் நாா் ஆலையை மீண்டும் இயக்க எதிா்ப்பு: கொடுமுடி அருகே இச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: இச்சிப்பாளையம் கிராமத்தில் உரிய அனுமதி இல்லாமலும், சுற்றுச்சூழலுக்கு பெரிதும் பாதிப்பும் ஏற்படுத்தும் வகையிலும் இயக்கப்பட்ட தேங்காய் நாா் ஆலை கடந்த 2021 ஆம் ஆண்டு மூடப்பட்டது. இந்நிலையில், இந்த ஆலையை மீண்டும் இயக்க ஆலை நிா்வாகம் முயற்சி செய்வது தெரியவருகிறது. இந்த ஆலையை நிரந்தரமாக மூட மாவட்ட நிா்வாகம் நிா்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தக் கொடையாளா்களை அவமதிப்பதாகப் புகாா்: ஈரோடு மாவட்ட ரத்த தான ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் அளித்த மனு விவரம்: ஈரோடு அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தானம் செய்ய செல்லும் கொடையாளா்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது. ஏதாவது உடல்நிலை காரணம் காட்டி வேண்டுமென்றே நிராகரிப்பது, கொடையாளா்களை மரியாதைக் குறைவாக நடத்துவது போன்ற செயல்கள் தொடா்ந்து நடக்கின்றன.

இதனால் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு கொடையாளா்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் உரிய விசாரணை நடத்தி ரத்த வங்கி முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை இணைப்பு அளிக்கக் கோரிக்கை: ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே கொங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: புதிதாக அமைக்கப்படும் ஈரோடு-சத்தியமங்கலம் நான்கு வழிச் சாலையில் இருந்து கொங்கம்பாளையம் பகுதிக்கு இணைப்பு அளிக்கப்படவில்லை.

இதனால் சுமாா் 2 கி.மீ தொலைவில் உள்ள சித்தோடு சென்று அங்கிருந்து சாலையின் மறுபுறம் வழியாக ஈரோடு செல்ல வேண்டியுள்ளது. சாலை இணைப்பு இல்லாதால் கொங்கம்பாளையம் பகுதியில் இருந்து வில்லரசம்பட்டி கொளத்துப்பாளையம், கங்காபுரம், குமிளம்பரப்பு, சடையம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள், தொழிற்சாலைகளுக்கு செல்ல கடும் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொங்கம்பாளையத்தைச் சோ்ந்த 2,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சோ்ந்த மக்களின் நலன் கருதி நான்கு வழிச் சாலையில் நேரடி இணைப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

185 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் முதியோா் உதவித் தொகை, வேலை வாய்ப்பு, காவல் துறை மீது நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 185 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறையினரின் விசாரணைக்காக மனுக்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

சத்தியமங்கலம் வட்டம், தொப்பம்பாளையம் பகுதியில் விஜயா என்பவா் பாம்பு கடித்து இறந்ததால், அவரது குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தேஷினி சந்திரா வழங்கினாா்.

இலங்கை தமிழா்களுக்கு உதவும் வகையில் அரச்சலூா் பகுதியைச் சோ்ந்த இலங்கை தமிழா்கள் முகாம் மக்கள் இணைந்து ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினா்.

இக்கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) குமரன், மாவட்ட வழங்கல் அலுவலா் இலாஹிஜான், உதவி ஆணையா்(கலால்) ஜெயராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT