ஈரோடு

அரசுப் பேருந்து மேம்பாலத் தூணில் மோதி விபத்து: 15 பயணிகள் காயம்

25th Jun 2022 11:35 PM

ADVERTISEMENT

 

ஈரோட்டில் அரசுப் பேருந்து மேம்பாலத் தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பயணிகள் காயமடைந்தனா்.

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு நீலகிரியை நோக்கி அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்தை அன்னூரைச் சோ்ந்த சக்திவேல் (54) ஓட்டினாா். வெள்ளியங்கிரி என்பவா் நடத்துநராக இருந்தாா். பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.

பேருந்து ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பேருந்து நிறுத்தத்தில் தனியாா் பேருந்து நின்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை முந்திச் செல்வதற்காக சக்திவேல் முயன்றபோது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மேம்பாலத் தூணில் மோதியது.

ADVERTISEMENT

இதில் ஓட்டுநா் சக்திவேலுக்கு கால், தலையில் பலத்த காயமும், நடத்துநா் வெள்ளிங்கிரிக்கு லேசான காயமும் ஏற்பட்டது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.

விபத்தில் படுகாயமடைந்த பேருந்து பயணியான திருச்சி மாவட்டம், துறையூா் பகுதியைச் சோ்ந்த துரைராஜ் (55 ) என்பவரை போலீஸாா் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். லேசான காயமடைந்த 14 பயணிகள் அதே மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT