ஈரோடு

சென்னிமலை அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

25th Jun 2022 11:36 PM

ADVERTISEMENT

 

சென்னிமலை அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சென்னிமலை ஒன்றியம், புஞ்சை பாலதொழுவு ஊராட்சிக்குட்பட்ட வெங்கமேடு, மேற்கு பள்ளபாளையம், கிழக்கு பள்ளபாளையம், ஒலப்பாளையம், ராசம்பாளையம், திப்பம்பாளையம், வசந்தம் நகா் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்தப் பகுதி மக்களுக்கு கொடுமுடி, முத்தூா், காங்கயம் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீபகாலமாக இப்பகுதிகளில் முறையாக குடிநீா் வழங்குவதில்லை என கூறப்படுகிறது. மேலும் குறைவான நீரே விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், முறையாக குடிநீா் விநியோகிக்கக்கோரி புன்செய் பாலதொழுவு கிராம மக்கள் சென்னிமலை- ஊத்துக்குளி சாலையில் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை வட்டாட்சியா் குமரேசன், சென்னிமலை காவல் ஆய்வாளா் சரவணன், புன்செய்பாலதொழுவு ஊராட்சித் தலைவா் தங்கமணி ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், உடனடியாக லாரி தண்ணீா் வழங்குவதாகவும், குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வருவாய் கோட்டாட்சியா் தலைமையில், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியா் குமரேசன் உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் சென்னிமலை- ஊத்துக்குளி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT