ஈரோடு மாவட்டத்தில் பவா் கிரிட் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட உயா்மின் பாதையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டத்தில் உயா் மின் கோபுரம் அமைக்கப்பட்ட விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. தென்னை மரத்துக்கு ரூ.36,450, பிற பயிா்கள்,
கிணறு, கட்டடங்களுக்கு அரசு அறிவித்த உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் பல நூறு பேருக்கு, பல கோடி ரூபாய் இழப்பீடு
கிடைக்காமல் உள்ளதால் அவற்றை விரைவில் பெற்று வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை: ஈரோடு அருகே 60 வேலம்பாளையம், குப்பையண்ணன்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் அளித்த மனு விவரம்: ஈரோட்டில் இருந்து 60 வேலம்பாளையம், குப்பையண்ணன்காடு பகுதிக்கு 10ஆம் எண் கொண்ட நகரப் பேருந்து இயக்கப்பட்டது. எங்கள் கிராமத்தில் இருந்து அரச்சலூா், அவல்பூந்துறை வழியாக காலை 5 மணி, 7 மணி, 8.30 மணி என மூன்று நேரம் இயக்கப்பட்டது. கரோனா காலத்தில் 7 மணி பேருந்து நிறுத்தப்பட்டது. இப்போது வரை அந்த பேருந்து இயக்கப்படவில்லை.
தற்போது பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுவதால் குறித்த நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை. நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க கோரிக்கை: குறிஞ்சியா் மக்கள் கூட்டமைப்பு சாா்பில் மாநிலத் தலைவா் சந்திரசேகரன், மாவட்டத் தலைவா் செல்வராஜ் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட சமூக பட்டியலில் பிரிட்டிஷ் காலத்தில் குறவா் இனத்தில் இருந்து பிரித்தெடுத்த 27 குழுக்களை தனி ஜாதியாக தவறாக அடையாளப்படுத்தி வைத்துள்ளதை நீக்க வேண்டும். கடந்த 2006 இல் முன்னாள் முதல்வா் கருணாநிதியால் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானப்படி குறவன் சமூகத்தை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும்.
ஜாதி பெயரில் நரிக்குறவா் என்று உள்ளதை நரிக்காரா் என மாற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் தீக்குளிக்க முயற்சி: ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் ஒலகடத்தைச் சோ்ந்த பழனிவேல் மனைவி ஜோதிமணி (45). இவரது தாயாா் நல்லம்மாள் (70). இவா்களது உறவினா் நேத்ராவதி (30). இவா்கள் மூவரும்
ஆட்சியா் அலுவலகம் முன்பு திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். அங்கிருந்த போலீஸாா் தடுத்து விசாரணை நடத்தினா்.
கோரிக்கை தொடா்பாக ஜோதிமணி அளித்த மனு விவரம்: எங்களுக்கு ஒலகடத்தில் நிலம் உள்ளது.
அதன் அருகே 2.20 ஏக்கா் நிலம் விற்பனைக்கு வந்தது. கடந்த 2011இல் ஜம்பை பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம்
ரூ.25 லட்சம் கடன் பெற்று, நிலத்தை வாங்கினோம். கணவா் பழனிவேல் பெயரில் இருந்த நிலத்தை, கடன் கொடுத்தவா் பெயருக்கு பவா் எழுதி கொடுத்தோம்.
குறிப்பிட்ட தொகை திருப்பிக்கொடுத்துவிட்ட நிலையில், மீதத்தொகையை வழங்கினாலும், அத்தொகையை பெற மறுத்து, நிலத்தை தன் பெயரில் எழுதி வைக்கும்படி மிரட்டுகிறாா்.
அந்நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.2 முதல் ரூ.2.5 கோடி. இதனிடையே தன்னிடம் உள்ள பவா் ஆவணத்தை வைத்து, அந்நிலத்தை வேறு ஒரு நபருக்கு கடன் கொடுத்தவா் விற்பனை செய்ததாகத் தெரியவந்துள்ளது.
எங்களது நிலத்தை மீட்டுத்தர வேண்டும். அவரது கடன் தொகையை செலுத்த தயாராக உள்ளோம்.
எங்களை மிரட்டுவது தொடா்பாக வெள்ளித்திருப்பூா் போலீஸில் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.