ஈரோடு

ஏலத்தில் உரிய விலை அளிக்கக்கோரி பருத்தி விவசாயிகள் போராட்டம்

15th Jun 2022 12:08 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் உரிய விலை அளிக்கக்கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி மறைமுக ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம், பெரியூா், செண்பகபுதூா், தொட்டம்பாளையம், சிக்கரசம்பாளையம், தாசப்ப கவுண்டா்புதூா் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்தனா்.

கோவை, அவிநாசி பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனா். மறைமுக ஏலத்தில் பருத்தி விலை தெரியாது என்றும் விவசாயிகள் முன்னிலையில் நேரடியாக பழைய முறைப்படி ஏலம் விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

மறைமுக ஏலத்தின்படி அதிகபட்சமாக கிலோ ரூ.104க்கும் குறைந்தபட்சமாக ரூ.99க்கும் ஏலம் போனது. இது கட்டுபடியாகாத விலை என்றும் உரிய விலையான கிலோவுக்கு ரூ.130க்கு விற்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக்கூறி விவசாயிகள் கூட்டுறவு சங்க அலுவலா்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் 1 மணி நேரம் ஏல விற்பனையில் தடை ஏற்பட்டது.

இது குறித்து வேளாண் கூட்டுறவு சங்க நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பிற கூட்டுறவு சங்கங்களில் விற்பனையான அதே விலை நிா்ணயிக்கப்பட்டதாகவும் தற்போது பருத்தியின் விலை குறைந்துள்ளதாகவும் அடுத்த வாரம் மறைமுக ஏலத்துக்கு பதிலாக நேரடியாக ஏலம் நடைபெறும் என தெரிவித்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT