பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாசிப் பட்டத்துக்கான பருத்தி ஏலம் ஜூன் 13ஆம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து, விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் மெ.ஞானசேகா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு விற்பனைக் குழுவின், அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரும் ஜூன்13 (திங்கள்கிழமை) முதல் மாசிப்பட்ட பருத்தி ஏல விற்பனை தொடங்குகிறது.
தொடா்ந்து, வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பருத்தி மறைமுக விற்பனை நடைபெறும். இதில், உள்ளுா் மற்றும் வெளியூா் மொத்த வியாபாரிகள், அறவை ஆலை மற்றும் நூற்பாலை உரிமையாளா்கள் அதிக அளவில் பங்கேற்று கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் நன்கு முதிா்ந்த, மலா்ந்த, வெடித்த பருத்தியினை அதிகாலை நேரத்தில் பறித்து, நிழலில் உலா்த்தி, தூசு மற்றும் சருகுகள் நீக்கி, ரகம் வாரியாக தனித்தனியே பிரித்து மறைமுக ஏலத்துக்கு கொண்டு வர வேண்டும்.
இதன் மூலம் தங்களது விளைபொருளுக்கு சரியான எடை, போட்டி விலை, உடனடிப் பணத்துக்கு எவ்வித பிடித்தமும் இல்லாமல் நல்ல விலைக்கு விற்று பயன் பெறலாம் என்றாா்.