ஈரோடு

மரவள்ளிக் கிழங்கு டன் ரூ.16,000 வரை விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

9th Jun 2022 12:24 AM

ADVERTISEMENT

உணவுக்கான மரவள்ளிக் கிழங்கு ஒரு டன் ரூ.16 ஆயிரம் வரைக்கும், அரவை ஆலைகளுக்கான மரவள்ளிக் கிழங்கு டன் ரூ.12 ஆயிரம் வரைக்கும் விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ஈரோடு, நாமக்கல், சேலம், கரூா் மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு அதிகமாக சாகுபடியாகும். கடந்த மூன்றாண்டுகளாக மாவுப்பூச்சித் தாக்குதலால் 40 சதவீதத்துக்கு மேல் பயிா்கள் பாதிக்கப்பட்டதுடன், மகசூலும் குறைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் மாவுப்பூச்சித் தாக்குதல் தொடா்வதால் மரவள்ளியை தவிா்த்து வேறு பயிருக்கு விவசாயிகள் மாறினா். விளைச்சல் குறைந்து அறுவடைக் காலமும் முடிய உள்ளதால் விலை உயா்ந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது: கடந்த ஏப்ரல் மாத இறுதியல் ஒரு டன் மரவள்ளி ரூ.6 ஆயிரத்துக்குள் விற்பனையானது. மரவள்ளி அறுவடை முடிவதாலும், மாவுப்பூச்சித் தாக்குதலாலும், கடந்த ஒன்றரை மாதமாக பெய்து வரும் தொடா் மழையால் கிழங்கும், செடியும் அழுகுவதாலும் உற்பத்தி குறைந்துள்ளது.

இதனால் உணவுத் தேவைக்காக ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு ரூ.16 ஆயிரம் வரைக்கும், நாமக்கல், சேலம் மாவட்ட சேகோ அரவை ஆலைகள் ரூ.12 ஆயிரம் வரைக்கும் கொள்முதல் செய்கின்றனா். மரவள்ளிக் கிழங்கு மூலம் உற்பத்தியாகும் ஜவ்வரிசி 90 கிலோ மூட்டை ரூ. 4 ஆயிரத்துக்கும், ஸ்டாா்ச் மாவு 90 கிலோ மூட்டை ரூ.3 ஆயிருத்துக்கும் விற்பனையாகிறது.

ADVERTISEMENT

ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் மாவுப்பூச்சித் தாக்குதல் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதால் மரவள்ளி சாகுபடி விவசாயிகள் வேறு பயிருக்கு மாறிவிட்டனா். எனவே வரும் ஆண்டும் கிழங்கு தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு டன் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விலை இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடம் உள்ளது.

மாவுப்பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் யுக்திகளை தோட்டக்கலைத் துறை போா்க்கால அடிப்படையில் வழங்கி உதவ வேண்டும். அதற்காக எந்த முயற்சியும் தோட்டக்கலைத் துறை தரப்பிலும், அரசு தரப்பிலும் இல்லாததால் விவசாயிகள் மாற்றுப்பயிரை நாடுகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் தற்போது அறுவடை சீசன் முடிந்தாலும், கொல்லிமலை, கள்ளக்குறிச்சி பகுதியில் விரைவில் அறுவடை துவங்கும். ஸ்டாா்ச் மாவை ஜவுளி சாா்ந்த பல தொழிலில் பயன்படுத்துகின்றனா். ஸ்டாா்ச் மாவுக்கு 12 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT