தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஈரோடு ஈவிஎன் சாலை மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மின்வாரிய பொறியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் இந்திராணி தலைமை வகித்தாா்.
நிதி நிலையை காரணம் கூறி அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள், நலத்திட்டங்கள் வழங்கக்கூடாது என வாரியம் கூறுவதை கைவிட்டு, அனைத்து சலுகையும் வழங்க வேண்டும். மின்வாரிய பணியாளா்கள் இதுவரை பெற்று வந்த பஞ்சப்படி, வீட்டுக்கடன், வாகனக் கடன், கல்விக் கடன் போன்றவற்றை தொடா்ந்து வழங்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டிய மூன்று சதவீத பஞ்சப்படி, சரண்டா் விடுப்பை பறிக்கும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்.
மின் வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரம் பணியிடங்களில் கடந்த ஐந்தாண்டுகளாக கேங்மேன் பணி தவிர மற்றவை நிரப்பப்படவில்லை. மின் கணக்கீட்டுப் பிரிவில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதால் அதனை உடனடியாக நிரப்ப வேண்டும்.
கடந்த 2019 டிசம்பா் 1ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வு தொடா்பான குழு ஒரு முறை கூட தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசவில்லை. உடன் பேச்சுவாா்த்தை நடத்தி ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். மின்வாரியத்தில் புதிய பணியிடங்களை ஏற்படுத்தி நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.