ஈரோடு

பள்ளி வாகனங்களில் ஹைட்ராலிக் கதவுகள் பொருத்த வேண்டாம்: போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்

7th Jun 2022 10:17 PM

ADVERTISEMENT

பள்ளி வாகனங்களில் ஹைட்ராலிக் அவசர கதவுகளை பொருத்த வேண்டாம் என்று போக்குவரத்து துறை அலுவலா்கள் அறிவுறுத்தினா்.

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு மற்றும் பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சாா்பில் 820 பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வு கோட்டாட்சியா் சதீஷ்குமாா் முன்னிலையில் ஈரோடு ஏஇடி பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த சோதனையின்போது போக்குவரத்து அலுவலா்கள் கூறியதாவது:

எந்த காரணத்தை முன்னிட்டும் பள்ளி வாகனங்கள் நகரங்களில் 40 கிலோ மீட்டா், புறநகா் பகுதிகளில் 55 கிலோ மீட்டா் வேகத்துக்கு மேல் இயக்கக் கூடாது. மதுபோதையில், கைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. ஓட்டுநருக்கு குறைந்தது ஐந்து ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

வாகனத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல உதவியாளா் இருக்க வேண்டும். உதவியாளா்கள் நடத்துநா் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 30 குழந்தைகள் வரை உள்ள வாகனங்களில் ஒரு சிசிடிவி கேமராவும், அதற்கு மேலுள்ள வாகனங்களில் இரண்டு சிசிடிவி கேமராவும் பொருத்த வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் பள்ளி நிா்வாகம் வாகன ஓட்டுநா் மற்றும் உதவியாளா் கூட்டம் நடத்தி தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகன ஓட்டுநா் உரிமம் புதுப்பிக்கும்போது, கண் பரிசோதனை செய்த மருத்துவரின் சான்று அவசியம் இருக்க வேண்டும்.

குழந்தைகளை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளை இறக்கிவிட்டு பெற்றோா் குழந்தையை அழைத்துச் செல்லும் வரை உதவியாளா் கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகள் வாகனத்தில் இருந்து இறங்கும்போது, மிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தினா்.

ஆய்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வெங்கட்ரமணி, பதுவைநாதன், சக்திவேல் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT