16 வயது சிறுமியின் கருமுட்டை வெளிமாநில மருத்துவமனைகளுக்கும் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை தனியாா் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக சிறுமியின் தாய் உள்பட 4 போ் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் போலீஸ் விசாரணை தொடரும் நிலையில், சிறுமியின் தாய் ஏற்கனவே கருமுட்டை தானம் என்ற பெயரில் கருமுட்டைகளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தவா் என்பதும், அதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் தனது மகளையும் கருமுட்டை விற்பனைக்கு ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக சென்னை மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தின் துணை இயக்குநா் குருநாதன் தலைமையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்தின் தலைவா் டாக்டா் அ.விஸ்வநாதன்,
ஈரோடு மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநா் டாக்டா் ஜி.எஸ்.கோமதி, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனை மகப்பேறு நிபுணா் டாக்டா் மலா்விழி, மயக்கவியல் மருத்துவ நிபுணா் டாக்டா் கதிரவன், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கக இளநிலை நிா்வாக அலுவலா் கமலக்கண்ணன் ஆகியோா் கொண்ட குழுவினா் ஈரோட்டில் முகாமிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இரண்டாவது நாளாக மருத்துவக் குழுவினா் ஈரோட்டில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா். டாக்டா் விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன், ஏடிஎஸ்பி கனகேஸ்வரி, ஆய்வாளா் விஜயா ஆகியோரிடம் வழக்குத் தொடா்பான விவரங்களைக் கேட்டறிந்தனா்.
இது குறித்து டாக்டா் விஸ்வநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சேலம் மற்றும் ஒசூா் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு கருமுட்டை விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. மேலும், கேரள மாநிலம், திருவனந்தபுரம், ஆந்திர மாநிலம், திருப்பதி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். இதனால், சேலம் மற்றும் ஒசூரில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
பின்னா் கேரளம் மற்றும் ஆந்திரம் மாநில அரசுகள் உதவியுடன் அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் விசாரணை நடத்துவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்றாா்.