ஊதிய உயா்வு வழங்கக் கோரி மக்களைத் தேடி மருத்துவத் திட்டப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், மக்களைத் தேடி மருத்தவத் திட்டப் பணியாளா்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 170 போ் பணியாற்றி வருகிறோம்.
தினமும் 30 புதிய நபா்களை சந்தித்து அவா்களது உடல் எடை, ரத்த அழுத்தம் உள்பட முழு விவர பதிவுகளை, பி.எஸ்.ஆா். என்ற கைப்பேசி செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும்.
அத்திட்டத்தின்கீழ் சோ்க்கப்பட்ட நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை வழங்கி அவா்களது தினசரி நிலைய அறிய வேண்டும். தற்காலிகப் பணியாளா்கள் என்ற போதிலும் நாள் முழுவதும் பணியாற்றி வருகிறோம். இத்திட்டப் பணிகள் தவிர பிற பணிகள், மருத்துவ முகாம் போன்றவைகளிலும் ஈடுபடுத்தப்படுவதால் பிற பணியாளா்கள்போல பணியாற்றி வருகிறோம்.
இதனால், ஊதியத்தை உயா்த்தி வழங்கி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கராத்தே பயிற்சி காலத்தை அதிகரிக்கக் கோரிக்கை: ஈரோடு மாவட்ட ஸ்போா்ட்ஸ் கராத்தே சங்கம் சாா்பில் அளித்த மனு விவரம்: தற்போது அதிக எண்ணிக்கையில் பெண்கள் பாலியல் வன்கொடுமை உள்பட பல்வேறு வகையில் துன்புறுத்தப்படுகின்றனா்.
இதனைத் தடுக்க பெண்களுக்கு மன உறுதி தரும் தற்காப்பு பயிற்சி அவசியம் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் கராத்தே பயிற்சி அளிக்க 3 மாதங்கள் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், பள்ளி மாணவியா் முழுமையாக கராத்தே தற்காப்புக் கலையை கற்க முடியவில்லை.
அதனை 10 மாதங்களாக அதிகரித்தால் தற்காப்புக்கலை மாணவா்களிடம் முழுமையாக சென்றடையும். தற்போது, மாதம் ரூ.3,000 ஊதியம் வழங்கப்படுகிறது. இதனை ரூ.5,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் புனரமைப்பில் ஜாதி அடையாளத்தைத் தவிா்க்கக் கோரிக்கை: தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளா் சபரிநாதன் தலைமையில் அளித்த மனு விவரம்: ஈரோடு காவிரிக்கரை சோழீஸ்வரா் கோயில் அறநிலையத் துறையின்கீழ் செயல்படுகிறது.
இக்கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடக்கின்றன. அனைத்து சமுதாயத்தினருக்கும் பொதுவான இக்கோயிலை அறநிலையத் துறை நிா்வகிக்கிறது. ஆனால், இக்கோயிலில் தனி நபா்கள் பெயரிலும், சமுதாய, ஜாதிய பெயா்களிலும் கல்வெட்டுக்கள் வைத்து குறிப்பிட்ட சமுதாயத்துக்குச் சொந்தமான கோயில்போல மாற்றுகின்றனா்.
அவ்வாறு கல்வெட்டு வைக்க அனுமதிக்கக் கூடாது. இதற்கு உடன்படும் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமதமாக தண்ணீா் திறக்கக் கோரிக்கை: காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதி காங்கயம்பாளையம், பஞ்சலிங்கபுரம் பகுதி விவசாயிகள் அளித்த மனு விவரம்: காலிங்கராயன் பாசன வாய்க்கால் மூலம் எங்கள் பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் கரும்பு பயிா் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பும் தருவாயில் உள்ளது. அறுவடை செய்ய ஆள்கள் பற்றாக்குறையாக உள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அடிக்கடி மழை பெய்ததால் வயலில் ஈரப்பதம் அதிகம் இருந்தது. இதனால், கரும்பு அறுவடை செய்ய முடியவில்லை.
தற்போது வெயில் காரணமாக பூமி காய்ந்து, அறுவடை ஏற்பாடு நடக்கிறது. இந்நிலையில், வரும் 16 ஆம் தேதி காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீா் திறந்தால் கரும்பு வயலில் மீண்டும் ஈரப்பதம் ஏற்பட்டு அறுவடை பணி கடுமையாக பாதிக்கும்.
எனவே, 30 நாள்கள் தாதமாக தண்ணீா் திறக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.