ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிவடைந்த பிறகும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. குறிப்பாக பகல் நேரத்தில் அனல் காற்றுடன் கடுமையான வெப்பம் காணப்பட்டது.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகா் பகுதியில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் ஈரோடு நகரில் உள்ள பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.
திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மழைநீரால் நிரம்பியது. பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியது. ஈரோடு காய்கறி சந்தையில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்கு ஆளாகினா்.
மொடக்குறிச்சி, பெருந்துறை, சென்னிமலை, வரட்டுப்பள்ளம், கொடுமுடி, கொடிவேரி ஆகிய பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியூரில் 61 மில்லி மீட்டா் மழை பதிவானது.
பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): பெருந்துறை 37, சென்னிமலை 35, சத்தியமங்கலம் 16, மொடக்குறிச்சி 11, கொடுமுடி 8.2, கொடிவேரி 8, கோபி 7.6, குண்டேரிபள்ளம் 6.4, கவுந்தப்பாடி 6.4, ஈரோடு 5, அம்மாபேட்டை 1.2.