ஈரோடு

இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

7th Jun 2022 10:16 PM

ADVERTISEMENT

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கூகலூா், தாழக்கொம்புபுதூரைச் சோ்ந்த நடராஜ் மகன் கிருஷ்ணன் (60). இவா் தனியாா் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், 2018இல் ஒத்தக்குதிரை பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, கோபியில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற அரசுப் பேருந்து கிருஷ்ணன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதையடுத்து, கோபி 3ஆவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு கிருஷ்ணனின் குடும்பத்தினா் வழக்கு தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் கடந்த 2020 அக்டோபரில் கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

உத்தரவைத் தொடா்ந்து இழப்பீடு வழங்காததால் கிருஷ்ணன் குடும்பத்தினா் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனா். அதன் பிறகும் இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி ஜெகநாதன் உத்தரவிட்டாா்.

அதன்பேரில் கோபி பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு செல்வதற்கு தயாராக இருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT