அந்தியூா் அருகே நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பிரம்மதேசம் ஊராட்சி, சின்னகுளம் அருகே சுமாா் 1.25 ஏக்கா் ஓடைப் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்படுவதாகவும், இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஆய்வு செய்த வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த மாா்ச் 14ஆம் தேதி ஆக்கிரமிப்பினை அகற்ற முயன்றனா். அப்போது, ஆக்கிரமிப்பு நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட விவசாயப் பயிா்கள் அறுவடை செய்யும் வரையில் கால அவகாசம் அளிக்குமாறு ஆக்கிரமிப்பாளா்கள் கேட்டுக் கொண்டதால், பணி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்தியூா் மண்டல துணை வட்டாட்சியா் ரவி, அத்தாணி வருவாய் ஆய்வாளா் நந்தகுமாா் ஆகியோா் தலைமையில் வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
அங்கு, அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலி மற்றும் எல்லைக் கற்கள் அகற்றப்பட்டன. மழை பெய்து தண்ணீா் தேங்கி நின்றதால், இரு நாள்களுக்குப் பின்னா் மீதமுள்ள ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.