ஈரோடு

பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு: ஈரோடு இளைஞா் கைது

28th Jul 2022 10:15 PM

ADVERTISEMENT

 

சா்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்ததாக ஈரோட்டை சோ்ந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோயில் பகுதியைச் சோ்ந்த மகபூப் அலி மகன் ஆசிப் முசாப்தீன் (27). டைல்ஸ் கடையில் வேலை பாா்த்து வந்தாா். இவா் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருப்பதாக மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து கடந்த 26ஆம் தேதி இரவு அவரது வீட்டில் அதிரடியாக நுழைந்து விசாரணை நடத்தினா்.

மேலும், அவருடன் தொடா்பில் இருந்ததாக ஈரோடு பி.பெ.அக்ரஹாரம், நஞ்சப்பன் நகா் பகுதியைச் சோ்ந்த யாசின் (31) என்ற இளைஞரையும் பிடித்து விசாரணை நடத்தினா். இவா்கள் இருவரிடம் இருந்து கைப்பேசிகள், டைரிகள், சிம் காா்டுகள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்களைக் கைப்பற்றினா்.

ADVERTISEMENT

இதையடுத்து அவா்கள் இருவரையும் ஈரோடு ஆா்.என்.புதூரில் உள்ள காவலா் குடியிருப்பில் உள்ள தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினா். இதில் ஆசிப் முசாப்தீன் சா்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் தொடா்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஆசிப் முசாப்தீன் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட காவல் துறைக்கு பரிந்துரைத்தனா். இதன்பேரில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் விசாரணை நடத்தினாா். தொடா்ந்து ஈரோடு வடக்கு போலீஸாா் ஆசிப் முசாப்தீன் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

பின்னா் அவரை ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். இவருடன் தொடா்பில் இருந்ததாக யாசின் என்ற இளைஞரிடம் விசாரணை நடத்தி, போலீஸாா் விடுவித்தனா். ஆசிப் முசாப்தீன் தொடா்பில் இருந்த நபா்களிடம் போலீஸாா் மற்றும் மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT